‘யோக்கியர்’களின் யோக்கியதை

நாடாளுமன்ற மக்களவையில் பிப்ரவரி 8ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்ததன் மூலம் பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தை குறைத்துவிட்டார் என்று காங்கிரசார் அமளியில் ஈடுபட்டனர்.

அப்படி என்னதான் மோடி பேசினார்? மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அவரது கண்ணெதிரே பல ஊழல்கள் நடந்தாலும் அவர் மட்டும் கறைபடியாதவராக இருந்தார். அவருக்கு மட்டுமே மழைக்கோட்டு அணிந்து கொண்டு குளிப்பது எப்படி என்ற கலை நன்கு தெரியும்” என்று விமர்சித்திருந்தார்.

இதற்குத்தான் ராகுலும், காங்கிரசாரும் குதியோ குதியென்று குதித்தார்கள். மோடிக்கு எதிராக ஏதாவது வராதா என்று காத்துக் கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய ஜனதா, திருணமூல் காங்கிரஸ் ராகுலின் பாட்டுக்குத் தாளம் போட்டார்கள்.

மன்மோகன் சிங் ரொம்ப நல்லவர், படித்தவர், மிஸ்டர் கிளீன் என்று பெயரெடுத்தவர். ஆனால் அவரது பத்து வருட ஆட்சி இந்தியாவின் இருண்ட காலம் என்று சொன்னால் மிகையாகாது. அவரை பொம்மை போல் வைத்துக் கொண்டு திரைமறைவில் சோனியாதான் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். மன்மோகன்சிங் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. கொஞ்சம் சொரணை உள்ளவராகவும் இருந்திருக்க வேண்டும். அவர் கண் எதிரில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்திருந்தன. கொள்ளையில் சோனியா, அவரது மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோருக்கும் பங்கு உள்ளது. இவ்வளவு ஊழல்கள் நடந்தபோது வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரை மோடி விமர்சித்தது நூறு சதவீதம் சரியானதே.

மோடியின் விமர்சனம் தரக்குறைவாக இருக்கிறதே என்று காங்கிரசார் கண்ணீர் வடிக்கின்றனர். குஜராத் தேர்தலில் சோனியா நரேந்திர மோடியை ‘ஓர் மரண வியாபாரி’ என்று அழைத்தாரே… அது தகுதியான விமர்சனம்தான் என்று இப்போது கூச்சல் போடும் காங்கிரசார் கருதுகிறார்களா?

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எரிவாயு வழங்கல் பற்றிய அவசரச் சட்டம் வெளியானது. அந்த சட்ட நகலை ஊடகத்தார் கண்முன் கிழித்தெறிந்து நான்சென்ஸ்” என்று உறுமிய ராகுல் இதுவரை மன்மோகனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்பதை மக்கள் மறக்கவில்லை.