பாரதத்தின் விஞ்ஞானியும், கல்வியாளருமான யாஷ் பால், `அண்டக் கதிர்கள்’ எனப்படும் `காஸ்மிக் ரேஸ்’ குறித்து ஆய்வு செய்தவர். சிறந்த கல்வி அறிவியல் நிறுவனங்களை உருவாக்கியவர். டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) தனது பணியைத் தொடங்கியவர், பின்னர் 1986 முதல் 1991 வரை பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) தலைவராகவும் பணியாற்றினார்.
அறிவியலாளர் யாஷ் பால் 1926-ம் ஆண்டு, பாரதத்தின் பிரிக்கப்படாத பஞ்சாப் மாகாணத்தில் `ஜாங்’ என்னும் இடத்தில், ராம் பியாரிலால்- − லட்சுமிதேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். 1935ல், குவெட்டா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தரைமட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த இளம் யாஷ் பாலும், அவரது சகோதரர், சகோதரியும் மீட்கப்பட்டனர். அதன் பின்பு கல்விக்காக ஹரியானாவின் கைத்தல் மாவட்டத்திற்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. 1945–1947 காலகட்டத்தில், பிரிக்கப்படாத பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் லாகூர் வளாகத்தில், இயற்பியலில் பி.எஸ்.சி. பயின்றார். 1947-ல், பி.எஸ்.சி.யின் இறுதியாண்டில் பாரதப் பிரிவினையின் காரணமாக, அவரது படிப்பு தடைபட்டது. தந்தையின் பணி மாறுதல் காரணமாக அவர் டெல்லிக்கு சென்றார். பிரிவினைக்குப் பிறகு நடந்த கலவரங்களினால், படிப்பைத் தொடர முடியவில்லை.
டெல்லி பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் டி.எஸ். கோத்தாரி உதவியுடன் டெல்லியில் 1947–1949 காலகட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றார். 1958-ல், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். யாஷ் பால் தனது பணி வாழ்க்கையை மும்பை நகரில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில், காஸ்மிக் கதிர்கள் குறித்த ஆய்வுக் குழுவின் உறுப்பினராகத் தொடங்கினார். 1972-ல், மத்திய அரசு தனது விண்வெளித்துறையை தொடங்கியபோது, அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார்.
1983–84ல், திட்டக் குழுவின் தலைமை ஆலோசகராகவும், 1984–1986ல் அறிவியல், தொழில்நுட்பத்துறையின் செயலாளராகவும், 1986–91ல், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தலைவராகவும் நியமிக்கப்பட்டார். UGC தலைவராக இருந்த காலத்தில், UGC நிதியுதவியுடன் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ‘வானியல் மற்றும் வானியற்பியலுக்கான பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மையம்’ (IUCAA) உருவானது. 2007−-2012ல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பதவி வகித்தார்.
2013-ம் ஆண்டில், பாரதத்தின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருதான ‘பத்ம விபூஷண்’ அவருக்கு வழங்கப்பட்டது. 1953ல், மஹாராஷ்ட்ரா மாநிலம் கிர்க்கியில் பத்மா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராகுல், அணில் என இரு மகன்கள். அணில் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராகுல் பாரதத்தில் ஒரு விஞ்ஞானியாக உள்ளார். 2017 ஜூலை 24 அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், முதுமை தொடர்பான நோய்களால் காலமானார்.