இங்கே ஊடும் பாவுமாக இழையோடுது தேசியம்

தமிழகத்தில் 2,43,575 கைத்தறி நெசவாளர்கள் இருப்பதாக 2020ல் நடந்த 4 வது கைத்தறிசார் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இத்துறையில் நெசவாளர்கள், நெசவு சார்ந்த தொழிலாளர்கள் ஆகியோரில் 70%-க்கும் அதிகமானோர் பெண்கள்; எனவே நெசவு, மகளிர் அதிகாரமளித்தலுக்கு நேரடியான பங்களிப்பு.
கைத்தறிக்கு குறைந்த மூலதனமே தேவை; மின்சாரத் தேவையும் குறைவு. சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறை. ஆனால் நாகரிக (ஃபேஷன்) போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள், வேகமாக மாறி வரும் வாடிக்கையாளர் நாட்டங்கள் இவற்றுக்கு ஏற்ப புதுமைகளைப் புகுத்த உள்ளார்ந்த நெளிவுசுளிவும் கொண்ட துறை இது.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில், 1905 ஆகஸ்ட் 7 அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், உள்நாட்டுத் தொழில்களையும், குறிப்பாகக் கைத்தறி நெசவாளர்களையும் ஊக்குவித்தது. 2015 ல், பாரத அரசு ஒவ்வொரு ஆண்டும் அந்த தேதியை ‘தேசிய கைத்தறி தின’மாக அறிவிக்க முடிவு செய்தது. முதல் தேசிய கைத்தறி தினத்தை, 2015 ஆகஸ்ட் 7 அன்று, பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் தொன்றுதொட்டு இங்கே நெசவாளப் பெருங்குடி மக்கள் மெல்லிய துகில் நெசவின் சிகரம் தொட்டவர்கள். ”ஆவியன்ன அவிநூற் கலிங்கம்”/ பாம்பு பயந்தன்ன வடிவின் / காம்பின் கழைபடு சொலியின் / இழைமணி வாரா ஒண்பூங் கலிங்கம்” என்ற புறநானூற்று வரிகள் என்ன சொல்கின்றன? நீராவி போல, பாம்பு உரித்த சட்டை போல, மூங்கிலின் உள்புற வெண்படலம் போல, அவ்வளவு மெல்லிய துணி நெய்யும் திறன் கொண்ட நமது நெசவாள மூதாதைகளையே இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது புறநானூறு.
நெசவுக் குடிகளே பெரும்பாலும் நிறைந்த ஊர்களின் மையத்தில் நெசவாளர் பாவு ஆற்ற ‘பாவடி’ திடல் இருக்கும். ‘துகிலி’ என்று கும்பகோணத்தை அடுத்த கிராமம், வேட்டி நெசவுக்கு பேர் போனது. இந்த ஊரார் தஞ்சை மன்னர்களுக்கு வேட்டி அனுப்பிய மரபு குறித்து பெருமை கொள்பவர்கள்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் முன்னெடுக்கும் தேச ஒற்றுமைப் பணி தழைக்க நெசவாள சமூகத்தவர்களான சௌராஷ்ட்ர பெருமக்கள் சிறப்பாக பங்களித்த வரலாற்றை மூன்று ஆண்டுகளுக்கு முன் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மக்களுடன் பகிர்ந்து கொண்டார். என்றும் தமிழகத்தில் தேசியம் இழையோடுவதை தமிழர்கள் புரிந்து கொள்ள அது உதவியது.
நெசவு, ஊடும் பாவுமாக பாரத வாழ்வில் வியாபிப்பதை, தேசிய கைத்தறி தினம் ஞாபகப்படுத்துகிறது.