ஆட்டங்கள் பற்பல, தேசம் ஒன்று!

பிரபல பாண்டவானி கலைஞர் ‘பத்ம விபூஷண்’ தீஜன் பாயி ஜூலை 5 அன்று 70வது வயதில் காலமானார். சத்தீஸ்கரில் துர்க் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்த இவர் தனது பாண்டவானி கலை மூலம், உலக அரங்கை அதிர வைத்தவர். பாண்டவானி என்பது மஹாபாரதத்தை பாடலாலும், நடிப்பாலும் விளக்கும் அழகிய நாட்டுப்புறக் கலை. பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த இக்கலையை, தனது 13வது வயதிலிருந்தே தீஜன் பாய் நிகழ்த்தினார். அதற்காக ஊரார் இவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்தபோதும், மனம் தளராமல் இக்கலையை பயிற்சி செய்து தொடர்ந்து நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. சுமார் ஆறிலிருந்து எட்டு மணிநேரம் நின்றபடியே மஹாபாரதத்தைப் பாடி நடித்துக் காட்டுவார். பீமனாக கர்ஜிப்பார், திடீரென திரௌபதியாக அழுவார், பிறகு கண்ணனாக மாறி கீதோபதேசம் செய்வார். இவரது ‘கீசக வதம் நிகழ்ச்சி’ மிகவும் பிரசித்தி பெற்றது.
“கலா கே லியே ஜாத் பாத் நஹீ ஹோதி. மஹாபாரத் ஸப் கா ஹை”- கலைக்கு ஜாதி, மத வேறுபாடில்லை. மஹாபாரதம் அனைவருக்குமானது என்பதே இவரது வாக்கு. சங்கீத நாடக அகடமி விருது பெற்ற இவர், தனக்குப் பிறகும் பாண்டவானி தொடர வேண்டுமென்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வந்தார். வெளிநாடுகளிலும் இந்தக் கலையை பிரபலப்படுத்தியவர் தீஜன் பாய். பாண்டவானி போலவே நம் தேசத்தில் கதகளி, பாங்கரா, கோந்தள், புர்ர கதா, வில்லுப் பாட்டு, தெய்யம் என பலவகை நாட்டுப்புறக் கலைகள் உள்ளன. இவை வெறும் கேளிக்கையல்ல. வெகுஜன மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை என்பதில் ஐயமில்லை. அமோக விளைச்சலை அறுவடை செய்த மகிழ்ச்சியில் ஏற்படும் உற்சாகத் துள்ளல் தான் பஞ்சாபின் பாங்கரா நடனம். வயலே இங்கு மேடை.நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கின் வீர மைந்தர்கள் ஈட்டி ஏந்தி ஆடும் நடனம் வேட்டையில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் ஆட்டமே. மஹாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் நிகழ்த்தப்படும் ‘கோந்தள்’ என்ற ஆட்டம் தேவியை பிரார்த்தித்து ஆடுவதே. வேண்டுதல் நிறைவேறிய பின் அம்மனுக்கு நன்றி கூறும் வகையில், இரவு முழுவதும் ஆடுவர்.
‘தெய்யம்’ என்ற கேரள வகை நடனத்தில் மனிதனே இறைவனாக மாறி ஆடுவான். உணர்ச்சி மிகுந்து ஆடியபடி அவன் கூறும் செய்தியை தெய்வ வாக்காகவே ஏற்று மகிழ்வதுடன், அவனது ஆசி பெற வேண்டி வணங்குவர் மக்கள். ‘கதகளியும்’ கேரள நடனமே. ஒப்பனைக்கு தனிச் சிறப்பு பெற்ற நடன வகை. கண்களாலேயே நவரசத்தையும் வெளிப்படுத்தும் கலை. சங்கர வெங்கடேஸ்வரன் பிரபல கதகளி கலைஞர். நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக பீமனாகவோ, ராவணனாகவோ, நளனாகவோ அயராமல் நடித்துக் காட்டுவார்.
ஆந்திரா, தெலுங்கானா பகுதியின் நாட்டார் கலை ‘புர்ர கதா’. தம்புரா போன்ற இசைக் கருவியுடன் உரக்கப் பாடியபடி கதை சொல்லும் கலை. இதில் பக்தி இருக்கும், அரசியல் இருக்கும், நகைச்சுவையும் இருக்கும்.
நம்மூர் வில்லுப் பாட்டும் ஏறக்குறைய புர்ர கதா போன்றதே. உட்கார்ந்தபடி வில்லிசைத்து பாடிக்கொண்டே புராணக் கதைகளை விளக்குவதுடன், அன்றாட நிகழ்வுகளை, சமூக சிந்தனையை எடுத்துக்கூறும் கலை. மதுரை வட்டார ஒயிலாட்டம், வண்ணமயமான தலைப்பாகை, கையில் வண்ணத்துணி தவிர ஒப்பனையில்லாத சீரான காலடி வைப்புக்குப் பேர் போனது. பாரதம் ஒன்று. கலைகள் வெவ்வேறு. ஆனால் மொழி, உடை, இசை, பாணி எல்லாம் வேறுபட்டாலும் இந்தக் கலைகளின் நோக்கம் ஒன்றே. அது: ‘மக்களை கலாச்சார இழையில் கோர்த்திணைப்பது’.
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா!!!

 

ப்ரியா ராம்குமார்