மோடி மீதான தனிப்பட்ட தாக்குதலால் யாருக்கும் எந்த பயனுமில்லை: மத்திய அமைச்சர்

”பிரதமர் மோடி மீதான தனிப்பட்ட தாக்குதல்களால் யாருக்கும் எந்தவித பயனுமில்லை. ஏனெனில் நாங்கள் எல்லாம் மோடியின் குடும்ப உறுப்பினர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியுள்ளார். பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை, அவர் ஹிந்துவே இல்லை என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், திமுக எம்.பி., ஆ.ராசாவும், பிரதமர் மோடி ஜெயிலுக்கு போவார் எனவும், திமுக.,வினர் ராமருக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். இதுவும் சர்ச்சையானது. இண்டியா கூட்டணியை சேர்ந்த கட்சியினர் மாறிமாறி பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கண்டித்துள்ளார். அவர் கூறியதாவது: ராமர், நமது தேசத்தின் ஆன்மா. அந்த உண்மையை அறியாதவர்கள் மட்டுமே இப்படியெல்லாம் பேசுவார்கள். ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் குடும்பவாதம் பற்றி பேசுவது ஆகிய மூன்றுமே இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் 3 தூண்களாக மாறிவிட்டன. அவர்கள் வலுவான நமது ஜனநாயகத்தை தாக்குகின்றனர். பிரதமர் மோடி மீதான தனிப்பட்ட தாக்குதல்களால் யாருக்கும் எந்தவித பயனுமில்லை. ஏனெனில் நாங்கள் எல்லாம் மோடியின் குடும்ப உறுப்பினர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.