முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உரிமையை பறிக்க முடியாது – ஆர்.பி.வி.எஸ்.மணியன்

 ”நம் நாட்டின் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் தேசிய குடிமக்கள். அவர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது,” என, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசினார்.

தி.நகர், குரு பாலாஜி திருமண மண்டபத்தில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன், நேற்று முன்தினம் மாலை உரையாற்றினார்.

பாதுகாப்பு

அப்போது அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டம், நாட்டின் எந்த மதத்தைச் சார்ந்த குடிமகனையும் பாதிக்காது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, பலர் வந்துள்ளனர். அவர்கள், சட்டப்படி நம் நாட்டு குடிமக்களாக இல்லை. இவர்களில், மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு, இங்கு வந்து குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களை நிரந்தர குடிமக்களாக்கவே, இந்த சட்டம் இயற்றப்பட்டுஉள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து, குடியுரிமை சட்டம், 1955ல் கூறப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு குடிமகனுக்கும், அடையாள அட்டை வழங்க வேண்டும் என, வலியுறுத்துகிறது.தற்போது, பிற நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், குடியுரிமை திருத்த சட்டம் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராக ஓட்டளித்திருக்க வேண்டும் அல்லது அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்து, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க வேண்டும்.அதை விட்டு, வீதியில் போராடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. சட்டசபையில், இதற்கு எதிராக மசோதா இயற்றுவதும், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது.பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என, பலர் நினைத்தனர். ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.திட்டம் தீட்டியுள்ளனர்இதனால், தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி, மத்திய அரசை கலைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக, சிறுபான்மை மக்களை, எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி கொள்கின்றனர்.முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் தேசிய குடிமக்கள். அவர்களின் உரிமையை, யாராலும் பறிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.