முதல் முறையாக இணையும் அம்பானி – அதானி

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களான அம்பானியும், அதானியும், முதல் முறையாக இணைந்து செயல்பட உள்ளனர். ‘அதானி பவர்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘மஹான் எனர்ஜென்’ நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ வாங்கியுள்ளது.

மொத்தம் 5 கோடி பங்குகளை, 50 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வரும் அதானியின் மின்சாரத் திட்டத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை ரிலையன்ஸ் பயன்படுத்த உள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த அம்பானியும், அதானியும் ஊடகங்களாலும், வணிக துறையினராலும் பல ஆண்டுகளாக போட்டியாளர்களாகவே பார்க்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது இருவரும் இணைந்து செயல்பட உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2022ம் ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் முன்பு தொடர்பிலிருந்த ஒரு நிறுவனம், என்.டி.டி.வி.,யின் பங்குகளை அதானிக்கு விற்று, அதை கையகப்படுத்துவதற்கு வழி வகுத்தது. அதானி நிறுவனம் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற விரும்புகிறது. இதை கருத்தில்கொண்டு, மூன்று ஜிகாபேக்டரிகளை அதானி நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில், ரிலையன்ஸ் நிறுவனமும், குஜராத்தின் ஜாம்நகரில், நான்கு ஜிகாபேக்டரிகளை உருவாக்கி வருகிறது.

முன்னதாக கடந்த 2022ல், ‘5ஜி’ என்னும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க அதானி குழுமமும் விண்ணப்பித்த நிலையில், மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இருப்பினும், ரிலையன்ஸ் நிறுவனத்தைப் போன்று, பொது நெட்வொர்க்குகளுக்கு அதானி குழுமம் விண்ணப்பிக்காததால் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

இந்த மாத துவக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அம்பானியின் இளைய மகன் ஆனந்தின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில், அதானியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.