முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா: மகாராஷ்டிரா சபாநாயகர் அறிவிப்பு

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அவரது ஆதரவு எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என மகாராஷ்டிரா சபாநாயகர் நேற்று அறிவித்தார். இது உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து, பாஜக.,வுடன் இணைந்து ஆட்சி அமைத்தனர். இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மனுத்தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று மாலை தனது முடிவை அறிவித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா கட்சி. எனவே, அவரது ஆதரவு எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியிலிருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையத்திடம் உள்ள அரசியல் சாசனப்படி நான் என் முடிவுகளை எடுத்துள்ளேன். அதன் கீழ், அனைத்து அம்சங்களும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு சாதகமாக உள்ளது. இவ்வாறு சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார்.

இந்த முடிவு மூலம் ஷிண்டே அணி கொறடா பிறப்பித்த உத்த ரவு தான் செல்லும். இதனால் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.