முதல்வரை கைது செய்யுங்கள்; பா.ஜ., நிர்வாகி ஆவேசம்

ராமநாதபுரத்தில் உலக யோகா தினம், மத்திய பா.ஜ., ஆட்சியின், ஒன்பதாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அண்மையில் அவதுாறு வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்துள்ள பா.ஜ., மாநில செயலர் சூர்யா பேசியதாவது: கைதாகி 5 நாட்களுக்கு பின் முதன்முறையாக மேடை ஏறியுள்ளேன். போலீசார் சீருடையின்றி, சுவர் ஏறி குதித்து, திருடர்களை போல வந்து என்னை கைது செய்தனர்.என்னை கைது செய்ய 500 போலீசாரை முதல்வர் ஸ்டாலின் அனுப்பினார்.இது போல, கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசாரை அனுப்பியிருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.பட்டியல் இன மக்கள் குடிநீரில் மலம் கலந்ததை தடுத்திருக்கலாம். துாத்துக்குடியில் வி.ஏ.ஓ., கொலையை தடுத்திருக்கலாம். தி.மு.க., ஆட்சிக்கு வர தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால், பெண்களுக்கு மாத உதவித்தொகை, சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம், நீட் தேர்வு ரத்து, மாதந்தோறும் மின் கட்டணம் போன்ற 10 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. தேர்தலில் பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து, மக்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலினை முதலில் கைது செய்ய வேண்டும்.இந்த ஆட்சியில் கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை.தமிழக மக்கள் உயிர் பயத்துடன் வாழ்கின்றனர் என்று அவர் பேசினார்.