மியான்மர் இன்று தேக்கு தேசத்தில் தவிக்கும் தமிழர்கள்

பாரதத்தின் அண்டை நாடு மியான்மரில் (பர்மாவில்) ஒரு படு சுவாரஸ்யமான விஷயம் என்றால் பாரத வரைபடத்தில் உள்ளது போலவே அங்கே மொழிவாரி மக்கள் சமூகங்கள் அடுக்கடுக்காக வசிக்கின்றன. மியான்மரின் தென் கோடியில் தமிழர்கள், தெலுங்கர்கள்; அதற்கு மேலே ஹிந்தி, போஜ்புரி பேசுவோர்; அதற்கும் மேலே வங்காளி, மணிப்புரி பேசுவோர்; பஞ்சாபியர்களும் ராஜஸ்தானிகளும் மியான்மர் முழுவதும் பரவி வசிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையில் தெற்காசிய மக்கள் வசித்த இடம் யாங்கூன் (பழைய ரங்கூன்) நகரம். இன்று இங்கு விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில்தான் குடியுரிமை பெற்ற பாரத-பர்மிய மக்கள்  தென்படுகிறார்கள். மற்ற சமூகத்தினருக்கு குடியுரிமை கிடையாது. பாரத மொழிகளில் இலக்கியமும் கலாச்சாரமும் தழைத்தோங்கும் மையமாக ரங்கூன் 60களில் விளங்கியதெல்லாம் கனவாகிவிட்டது. வெ. சாமிநாத சர்மா எனது பர்மா பயணம் என்று நூல் எழுதி சோகத்தைத் தான் பதிவு செய்திருக்கிறார். வங்காளி மொழியில் சரத்சந்திர சட்டர்ஜி சென்ற நூற்றாண்டின் முற்பகுதி பர்மாவை தனது கதையில் தீட்டிக் காட்டியதை படித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். மியான்மரின் மாந்தலே நகரில் உள்ள கோட்டையை நம்மால் மறக்க முடியுமா? லோகமான்ய பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை வெள்ளையர்கள் சிறைவைத்த இடமாயிற்றே அது? ஆனால் இன்று அங்கே அந்த மாமனிதர்களின் ஈடுஇணையற்ற பலிதானம் குறித்து எடுத்துச்சொல்லக்கூடிய எந்த ஒரு நினைவகமும் இல்லை.

யாங்கூன் வருகிற இந்திய சுற்றுலாப் பயணி எவரும் மொகலாயப் பேரரசர் பகதூர் ஜா ஜபர், அவரது மனைவி பேகம் ஜீனத் மஹல் இருவரின் புதைமேடுகளை பார்க்காமல் போவதில்லை. 1857 சுதந்திர பேரெழுச்சியின்போது ஆங்கிலேய அரசு அவர்களை சிறைபிடித்து இங்கே கொண்டுவந்து வைத்திருந்தது இப்படி நினைவூட்டப்படுகிறது.

20ம் நூற்றாண்டில் மியான்மரில் வசித்த பாரதிய மக்களின் மிகப்பெரிய பங்களிப்பு பொருளாதாரத் துறையில் என்று கூறலாம். ஆங்கிலேயன் பாரத மக்களை பர்மாவில் பண்ணை வேலைகளுக்காக கூட்டம் கூட்டமாக இங்கே கொண்டுவந்திருந்தான். நம் மக்களுக்குத்தான் தானிய சாகுபடி கைவந்த கலையாயிற்றே அதுமட்டுமல்ல. கொடுக்கல் வாங்கல் தொழில் செய்யும் நாட்டுக்கோட்டை நகரத்தார் பர்மாவிலும் மற்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் திறம்பட தொழில் செய்து செழுமையாக வாழ்ந்துவந்தார்கள். தமிழகத்தின் செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து வந்த அவர்கள் இந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அந்த நாட்களில் இங்கே வங்கிகள் கிடையாது. விவசாயிகள் கடன் வாங்க நகரத்தார்களை மட்டுமே நம்பி இருந்தார்கள். இன்றுவரை மியான்மரில் வங்கிகள் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யும் ஏற்பாடு அநேகமாக இல்லை.

நகரத்தார் பர்மாவின் விவசாயத்தை நவீனப்படுத்துவதில் ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்று பொருளாதார நிபுணர் ஷான் டனல் 2005ல் பதிவு செய்திருக்கிறார். நகரத்தார்தான் உள்ளூர் மக்களுக்கும் ஐரோப்பிய பொருளாதாரத்திற்கும் இடையே பாலம் போல செயல்பட்டார்கள். இயந்திரங்களை இறக்குமதி செய்ய பாதை வகுத்தார்கள். விதவிதமான வேலைவாய்ப்புகளை உள்ளூர் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

கடன் கொடுக்கும் நகரத்தார், கடன் வசூலில் கண்டிப்புக் காட்டினார்கள். பர்மிய மக்கள் பட்டகடனை தீர்ப்பதற்கு தங்கள் நிலபுலன்களை பறிகொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அங்கே பலர் மனதில் தமிழர்கள் மீதே வன்மம் புகையத் தொடங்கியது. 1962ல் மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்திய வம்சாவளி குடும்பங்கள் பர்மாவிலிருந்து வெளியேறவேண்டியிருந்தது. அதன் பிறகும் அங்கேயே வசித்துவரும் இந்தியர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையினர் தமிழர்களே. அவர்கள் தங்கள் பண்பாட்டையும் மொழியையும் பாதுகாத்துக்கொள்ள போராடி வருகிறார்கள். மியான்மரில் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்பதற்கு அங்குள்ள கல்விக் கொள்கை அனுமதிப்பதில்லை. இது மிகப் பெரிய தலைவலி. ஏனென்றால் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் கிடையாது. எனவே தமிழர்கள் பர்மிய மொழியை உள்வாங்கிக்கொண்டு வீடுகளிலும் அந்த மொழியிலேயே பேசலானார்கள். தமிழ் மொழியை தொடர்ந்து ஜீவனுடன் வைக்க ஒரே வழி கோயில்கள்தான். அத்துடன் சமூக மையங்களில் நடத்தப்படும் தமிழ் வகுப்புகள் மட்டுமே தமிழுக்கு கவசம். யாங்கூன் நகரில் தமிழ் நூல் வெளியீட்டாளர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் வெளியிடுவதெல்லாம் சமய சம்பந்தமான நூல்கள் மட்டுமே.

சமீபகாலமாக தமிழ் வகுப்புகளில் பங்கெடுக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ராணுவ ஆட்சி முடிந்து, போன ஆண்டு ஜனநாயக அரசு ஏற்பட்டதையடுத்து இது சாத்தியமாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, மியான்மரில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பார்த்து ரசிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இவற்றால் மியான்மரில் தமிழ் மொழியும் பண்பாடும் பாதுகாக்கப்படும் வாய்ப்பு தலைதூக்கியிருக்கிறது. தமிழகத்திலோ சங்கீதமும் பரதமும் நன்கு தழைத்துள்ளன. ஆனால் மியன்மரில் வசிக்கும் தமிழ் சமுதாயம் இந்த பாரம்பரிய கலைகளை நெருங்கமுடியாமல் தவிக்கிறது. காரணம், புதிய தலைமுறைக்கு இந்தக் கலைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கிடையாது. இந்த கலைகள் கற்றுத் தருபவர் எவராவது மியான்மருக்குள் வந்தால் யாங்கூன் நகரில் அவர் சங்கமமாகிவிடுகிறார். பச்சை பசேல் என்று மனம் குளிர செய்யும் கிழக்கு பகுதிகளில் சில நாட்களுக்கே சங்கீதமும் பரதமும் ரீங்காரமிடுவதை கேட்க முடிகிறது.

சென்ற ஆண்டு பல்வேறு நாடுகளில் மக்கள் கொண்டாடும் தமிழ் ஹிந்து பண்டிகையான தைப்பூசம் யாங்கூனிலும் அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டதையடுத்து இங்கு தமிழ் கலாச்சார மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து பல்லாயிரம் பக்தர்கள் அணியணியாக வருவதும் ஆங்காங்கே பலர் நேர்த்திக்கடன் தீர்க்க அலகு குத்திக்கொள்வதும் தைப்பூசத்தின் முத்திரைகள். இந்த தைப்பூச பால்குட ஊர்வலம் ரங்கூன் நகர் முழுவதையும் வியாபித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் தீர்த்த யாத்திரையாக வந்து பல்வேறு புனிதத் தலங்களுக்கு செல்வதுடன் பல ஆதீனங்களையும் துறவிகளையும் தரிசிப்பதால் மியான்மர் தமிழர்களுக்கு தங்கள் தாயகத்தின் பண்பாட்டுடன் இணைவதற்கும் வாய்ப்புக் கிடைக்கிறது, அவர்களின் தன்னம்பிக்கையும் வலுவடைகிறது. இவர்கள் தமிழகத்தில் வசிக்கும் தங்கள் உற்றார் உறவினர் போலவே ஆதி பரம்பரையிலும் பண்பாட்டிலும் ஒன்றிப்போய் இருக்கிறார்கள். என்றாலும் பாரதத்திற்கோ தமிழகத்திற்கோ விமானப் போக்குவரத்து அதிகம் கிடையாது. எனவே யாத்திரைகளுக்கு அதிக செலவு பிடிக்கிறது. தமிழகர்களிடையே பலருக்கு இது ஆயுட்கால சேமிப்புக்குச் சமம்.

தமிழர்களுக்கு முன் உள்ள மிகக் கடுமையான சவால் இவர்களுக்கு மியான்மரின் குடியுரிமை கிடையாது என்பதுதான். இவர்கள் நிலபுலன்களெல்லாம் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை பிரஜா உரிமை இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தொலைதூர கிராமங்களில் இன்றும்கூட குடியுரிமையற்ற மக்கள் பெரிய எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். இந்த நிலைமை மிகவும் கொடூரமானது. குடியுரிமை இல்லாவிட்டால் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாது; அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை; டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாது. எந்த ஒரு அரசு ஆவணமும் கிடைக்காது.

மியான்மரின் தென் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், 90களின் பிற்பகுதி தொடக்கம் தொழில்களில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். காரணம், தேசத்தின் பொருளாதார கட்டமைப்பில் இன்று வாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளன. எப்போதும் விளிம்பு நிலையிலேயே வாழ்ந்துவிட்ட காரணத்தால் பாரத வம்சாவளி மக்கள் மனதில், தங்களுக்கு அரசுப் பணி ஒருக்காலும் கிடைக்கப்போவதில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. எனவே அவர்கள் தொழில்களில் களம் இறங்கியுள்ளார்கள். அதுவும் தவிர தமிழர்கள் உழைப்பாளிகள், தொழில் ஊக்கம் உள்ளவர்கள், தொழிலை நடத்தும் நுட்பங்களை விரைவாக கற்றுக்கொள்கிறார்கள். எனவே எத்தனையோ பத்தாண்டுகளாக அவர்கள் செய்துவந்த தொழில்களில் அவர்களுக்கு ருசி ஏற்பட்டுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளாக போராடிப் போராடியே காலம் கழிக்கவேண்டியிருந்த தமிழர்களுக்கு இப்போது எதார்த்தமாக ஒளிமயமான எதிர்காலம் தென்படத் தொடங்கியுள்ளது. தொல்லை நிறைந்த கடந்தகாலத்தை அவர்கள் கடந்து முன்னேறி வருகிறார்கள். யாங்கூன் நகரின் தென்பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. கோயிலைச் சுற்றி தமிழர்கள் குடியிருப்புதான். இந்த கோயிலின் வருடாந்திர உற்சவத்தில் நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் மற்ற ஹிந்துக்களும் ஈர்க்கப்படுகிறார்கள். தமிழர்கள் கலாச்சார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எழுச்சி பெற்று வருகிறார்கள் என்பதன் அடையளமாக இந்த ஆலயத் திருவிழா விளங்குகிறது.

(கட்டுரையாளர் சர்வதேச ஒத்துழைப்புக்கான பரிஷத் பொதுச் செயலர்)

தமிழில்: பெரியசாமி

 

நாடற்றவர்களாக நம்மவர் வாழும் ஒரு நாடு மியான்மர்

இன்று மியன்மாரில் 2,50,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இன்று மியன்மாரில் இருக்கும் 4 லட்சம் இந்தியர்களில் 2 லட்சம் பேர் நாடற்றவர்களாக இருக்கின்றனர். ஒரு லட்சம் பேர் மியன்மார் நாட்டுக் குடிமகன்களாக இருக்கின்றனர். 1 இலட்சம் பேர் அனுமதி சீட்டு பெற்று (Resident permit) வாழ்கின்றனர் என்று 17-9-1988 ஹிந்து நாளிதழ் தெரிவிக்கிறது.

மியான்மரில் உள்ள பழைய கோயில்கள் சித்தி விநாயகர் கோயில் (1860); காளிகோயில் (1860); தாட்டானில் உள்ள தண்டபாணிக் கோயில் (1888); ரங்கூன் மகாமாரியம்மன் கோயில் (1903); பெருமாள் கோயில் (1927). 1933 வரை 62 ஆலயங்கள் பர்மா செட்டியார்கள் பேராதரவுடன் கட்டப்பட்டன. மோல் மீனில் உள்ள வேல்முருகன் கோயில் மலையில் உள்ளது. இதுவே பர்மாவில் உள்ள பெரிய ஹிந்துக் கோயிலாகும். தமிழர் நடத்தும் விழாக்களில் (தைப்பூசம்) பர்மியரும் கலந்து கொள்வார்களாம். தீமிதி, தேரோட்டத்தில் ஏராளமாக கலந்து கொள்வார்கள் என்று பலரும் தெரிவிக்கின்றனர். பொங்கலும் தீபாவளியும் கொண்டாடப்படுகின்றன.

1962ம் ஆண்டிற்குப்பிறகு வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தமிழர்களுக்கு இடம் இல்லை. செதித்தாள், புத்தக வெளியீடு மட்டும்தான் தமிழரின் தகவல் தொடர்பு சாதனமாகும். ’லோகமான்யா’ என்ற இதழ் புதன் கிழமை தோறும் வெளிவந்தது. வெ. சாமிநாத சர்மா ’ஜோதி’ என்ற இதழை பர்மாவில் நடத்திவிட்டு தமிழகம் திரும்பினார். பர்மாவில் குடியேறிய தமிழர்களில் செட்டியார்களே அதிகளவு தொழிலில் ஈடுபட்டனர். வட்டித் தொழிலிலும் நெல் ஏற்றுமதியிலும் ஈடுபட்டனர். 1950க்குப் பிறகு அரசு அலுவலர்கள், சிறுகடை வியாபாரிகள், நெல் விவசாயிகள், மரம் அறுப்போர், தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் என்றே பெரும்பாலான தமிழர் வாழ்கின்றனர். தற்போது தட்டோன் பகுதியில் நெல் வயல் உரிமையாளராக பலர் உள்ளனர்.

தொகுப்பு : ப.திருநாவுக்கரசு.

 

பர்மா பஜார்

பர்மாவின் ராணுவ அரசு துரத்தியதால் தமிழகம் நாடி ஓடிவந்த தமிழர்கள் ஏராளம்.  1960 களில் தமிழக அரசு பர்மா தமிழர்கள் வாழ்வதற்கான பல சலுகைகளைச் செது தந்தது. கும்மிடிப்பூண்டி, சோழவரம், எண்ணூர், செங்குன்றம் பகுதிகளில் பர்மா தமிழர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு அருகில் நடைபாதையில் உட்கார்ந்து பர்மா தமிழர்கள் வியாபாரம் செய அனுமதி வழங்கப்பட்டது. கப்பலில் வரக் கூடிய பொருட்களை வாங்கி, பர்மா தமிழர்கள் விற்றார்கள். இப்போதுள்ள பர்மா பஜார் அப்படித்தான் உருவானது.

தகவல் : சரவணன்

 

நகரத்தாருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது பர்மா!

பர்மாவில் (1940களில் இரண்டாம் உலகப் பெரும்போரின் போது)  ஜப்பானியர் குண்டு வீசியதும் அடகு நகைகளை இந்தியாவுக்குப் பத்திரமாகக் கொண்டுவர, ஓராயிரம் மைல்கள் அடர்ந்த காடுகளினூடேயும் மலைச் சரிவுகளிலும் நடையாக நடந்து சொல்லொணா இன்னல்களுக்கு ஆளாயினோர் சில ஆயிரம் நகரத்தார்கள். இவர்கள் 1942ல் செட்டி நாட்டில் பெரிய அளவில் நடைபெற்ற கலவரங்கள், கொள்ளைகளிலிருந்து பர்மியர்களுடைய நகைகளைக் காப்பாற்றினர். பிறகு கூர்க்காக்களை நியமித்து அவற்றைப் பேணினர். பின்னர் ரிசர்வ் வங்கியில் இசைவுபெற்று மீண்டும் பர்மாவுக்குக் கொண்டு போய் உரியவர்களிடம் சேர்த்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நகைகளைக் கண்ட பர்மியர் – ஆடவரும் பெண்டிரும் அடைந்த மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் அளவே இல்லை.

சோமலெ எழுதிய ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற நூலிலிருந்து; பக்கம் 601