மதுரை சித்திரைத் திருவிழா

ஏப். 27 முதல் மே 9 வரை

மீனாட்சி நடத்தும் அருளாட்சியின் மகத்தான காட்சி

சமுதாயத் திருவிழா  ஆகிறது சமயத் திருவிழா!

 

தமிழகத்தின் மிகப் பெரிய திருவிழாக்களுள் ஒன்று மதுரை சித்திரைத் திருவிழா. தென் மாவட்டங்களில் இருந்து வண்டி கட்டிக்கொண்டு வந்து மதுரையிலேயே பல நாட்கள் தங்கி விழாவை குடும்ப சகிதமாக கொண்டாடிவிட்டுதான் மதுரையிலிருந்து புறப்படுவார்கள். இப்போது தென் மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அலை அலையாய் திரண்டு வருகிறார்கள். சமீபகாலமாக வெளி நாட்டினர் வருகையும் அதிகரித்திருக்கிறது.

மதுரை எப்போதுமே திருவிழா மாநகரம் தான். பொதுவாக மதுரையை பெரிய கிராமம் என்று சொல்வார்கள். பதினெட்டு பட்டி கிராமம் என்று திரைப்படங்களில் அவ்வப்போது ஒரு வசனம் வரும் இல்லையா… மதுரையைச் சுற்றி அப்படி ஆயிரம் கிராமங்கள். கொண்டாட்டமும், குதுகலமும் மிக்க கிராமங்கள். பாரம்பரியத்தின் சுவடுகளை அழியாமல் பாதுகாத்து வருகிற கிராமங்கள். தேர்த் திருவிழா, அறுவடைத் திருவிழா, பால் குடம் எடுத்தல், பன்னீர்க் காவடி எடுத்தல் என்று ஆண்டு தோறும் மாவிலைத் தோரணம், மணியோசை, மேளம் தான்.

எல்லா ஊர் திருவிழாக்களுக்கும் முத்தாய்ப்பு மதுரை சித்திரைத் திருவிழா. கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள தத்துவம் ஒட்டுமொத்த உறவுகளையும், பாசம் என்ற கயிற்றால் கட்டிப் போட்டுவிடும். சொந்த பந்தங்கள் கூடிக் கும்மாளமிடுகிற குடும்ப விழா மாதிரி ஒரு கோயில் விழா தான் மதுரை சித்திரை திருவிழா.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு வரும். மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்ப்பதற்காக திருப்பரங் குன்றத்திலிருந்து முருகன் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். தன் தங்கையின் திருக்கல்யாணத்தைப் பார்ப்பதற்காக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு வருகிறார். எத்தனை ஊரை, எத்தனை பேரை இணைக்கிறது திருவிழா!

ஒற்றுமை உணர்வை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மதுரைக்கு மட்டுமல்ல மாநிலத்திற்கே மகிழ்ச்சியைப் பரவிப் படரச் செய்கிற திருவிழாவாகவே சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

சைவமும் வைணமும்

சங்கமிக்கிற திருவிழா

ஹிந்து சமயத்தின் இருபெரும் கிளைகளான சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைத்து ஒற்றுமையை ஏற்படுத்த மன்னர் திருமலை நாயக்கர் இரண்டு திருவிழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே திருவிழாவாக்கினார்.

அது என்ன இரண்டு விழாக்கள்?

மதுரைக்கு 25 கிலோமீட்டர் கிழக்கே அழகர்கோயில் மலை இருக்கிறது. மலை மீது பழமுதிர்சோலையில் ஆறுபடை அழகன் ஆறுமுகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

சித்திரை மாதம் கள்ளழகர் அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து மண்டூக மகரிஷிக்கும், நாரைக்கும் சாப விமோசனம் அளிப்பார். வைணவர்கள் கொண்டாடும் மிகப் பெரிய திருவிழாவாக இவ்விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.

இதே சித்திரையில்தான் மீனாட்சி திருக்கல்யாணம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். கொடியேற்றத்துடன் தொடங்கும் மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சைவர்கள் கொண்டாடும் மிகப் பெரிய திருவிழா இது.

ஹிந்து மத மறுமலர்ச்சி நாயகர்களாக தென் இந்தியவை ஆண்டு வந்தவர்கள் விஜயநகர மன்னர்கள். இவர்கள் காலத்தை ஹிந்து மத மறுமலர்ச்சியின் பொற்காலம் என்று நாம் சொல்லலாம். இவர்களின் வழியில் வந்த நாயக்க மன்னர்கள், தங்கள் ஆட்சியில் இந்து மதம் செழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

அப்படித்தான் மதுரையில் தனித்தனியாகக்கொண்டாடப்பட்டு வந்த அழகர் கோயில் திருவிழாவையும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவையும் ஒன்றாக இணைத்தார் திருமலை நாயக்கர்.

மதுரையில் இருக்கும் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தைப் பார்ப்பதற்காக அழகர் கோயிலில் இருந்து  கள்ளழகர் மதுரைக்கு வருகிறார். வைகை ஆற்றைக்  கடந்துதான் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல முடியும். எனவே அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். ஆனால் அதற்குள் மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்து விடுகிறது. எனவே தங்கையிடம் கோபித்துக் கொண்டு பாதி ஆற்றில் இருந்தபடியே அழகர் திரும்பிவிடுகிறார்.

இதுதான் இப்போதைய திருவிழாவின் தத்துவம்.

சித்திரை மாதம் முழுவதுமே கொண்டாட்டம்தான். வளர்பிறையில் கொடியேற்றப்பட்டு, பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், என்று ஆர்ப்பரிக்கும் மதுரை மக்களின் திருவிழா தேரோட்டத்துடன் நிறைவு பெறும்.

ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்” என்பார்கள். மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் என்றால், மதுரை மக்கள் அனைவரும் தங்கள் சொந்த வீட்டு விசேஷம் மாதிரித்தான் கொண்டாடுவார்கள்.

சுமங்கலிப் பெண்கள், தங்கள் பழைய தாலிக்கு பதிலாக புது தாலி அணிந்து மஞ்சள் குங்குமம் சூடி கணவர் நீண்ட நாள் வாழ அம்மனை வணங்கும் காட்சி… நம் பாரம்பரியத்திற்கு ஒரு சாட்சி.

பெண்ணைப் பெற்றவர்கள், நல்ல வரன் அமைய வேண்டி தாலி, மஞ்சள், குங்குமம் ஆகியவை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராக வந்து தாலி தானம் கொடுத்து நேர்த்திக்கடனை நிறைவு செய்கிறார்கள்.

தன் தங்கையின் திருமணத்தைக் காண முடியாத கோபத்தில் இருக்கிறார் அழகர். கோடை வெப்பம் வேறு. அழகருக்கு வேர்க்கும் அல்லவா? அதனால்தான் பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மனம் குளிர வரவேற்கிறார்கள்.

 

தனியார் நிறுவன உரிமையாளர் சில்பி கூறுகிறார்:

மனித உடம்பின் பயன் என்பது இறைவனை அடைவதுதான். நம் ஆன்மாவின் மீது இறைவன் சவாரி செய்துகொண்டிருக்கிறார். இந்த தத்துவத்தை உணர்த்துவதற்காக 5ம் நாள் வேடர் பறி லீலை திருவிழா நடைபெறுகிறது. இறைவன் குதிரை வாகனத்தில் வலம் வருகிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு கால்களையும் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு கண்களையும் விதியாகிய முகத்தையும் வேதங்கள் என்ற ஆபரணங்களை உடைய குதிரையில் இறைவன் சவாரி செய்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் இறைவன் அன்று குதிரையில் சவாரி செய்கிறார். எனவே 5ம் நாள் உற்சவம் எனக்கு மிகவும் பிடித்தது.

 

சிறுமியர் எல்லாம் தேவியின் வடிவம்

திருக்கல்யாணம் முடிந்தவுடன் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக, தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவார்கள். லட்சக்கணக்கான மக்கள் மதுரையை ஆட்சி புரியும் மீனாட்சி தேவியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்கள்.

 

எதிர் சேவை (வரவேற்பு)

மதுரைக்கு தங்கப் பல்லக்கில் வரும் கள்ளழகரை மூன்றுமாவடி என்ற இடத்தில் மக்கள் எதிர் கொண்டு மதுரைக்கு அழைத்து வருகிறார்கள். கள்ளழகரை வரவேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகர் வேடமிட்டு விழாவில் கலந்து கொள்வார்கள். அவர்களிடம் மக்கள் தங்கள் குறைகளை சொல்லி முறையிடுவார்கள்.

தங்கள் சொந்த வீட்டு விசேஷமாகக் கருதி ஆண்களும் பெண்களும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள். திருவிழாவில் மணக்க மணக்க மதுரை மல்லிகையைச் சூடிக்கொண்டு வலம் வரும் கன்னிப் பெண்களை தேவியரின் வடிவமாகவே பாவித்து வணங்குவது என்பது இந்த விழாவின் பெரிய ஹைலைட்.

சித்திரை திருவிழாவின் போது,

அன்னதானம் நீர் வழங்கும் ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

எட்டாம் நாள் திருவிழா அன்று தான் அன்னை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம். ரத்தின ஆபரணங்கள் அணிந்து செங்கோணல் ஏந்திய கைகளால் அன்னை தன்னை நாடிவந்த அனைவருக்கும் அருளை வாரி வழங்குவாள். அன்றுதான் அருள்மிகு அன்னை மீனாட்சி மதுரையில் ஆட்சி பொறுப்பை ஏற்கிறாள். சித்திரை, முதல் ஆவணி வரை அம்மன் ஆட்சி நடைபெறுகிறது. அம்மனின் ஆட்சியில் கீழ் வாழ்வதுதான் மிகப் பெரிய சந்தோஷம்.