மாதங்களில் நான் மார்கழி

சிறார்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் குதூகலிக்கும் மாதம் மார்கழி. நல்ல  மழை பெய்தபின் நெல்விதைகள் விதைத்து, நாற்று நட்டு,பின்னர் கதிர்களை ஆர்வத்துடன் அறுத்து கண்குளிரக்க் காணும் மாதம் மார்கழி. ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே கூறியிருக்கும் மாதம். தேவர்களின் மாதம் என்று அவரே மகுடம் சூடியிருக்கும் மாதம் மார்கழி.

ஜீவராசிகள் அனைத்தும் தடைகள், கஷ்டங்கள் பல நீங்கி எதிர் வரும் தை தொடங்கி சிறந்த வாழ்க்கை தகைத்திட வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதம் மார்கழி. முப்பது நாட்களும் ஆண்டாள் பாவை விரதம் இருந்த மாதம் மார்கழி. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மெருகேற்றிய வண்ணம் பல உற்ஸவ நிகழ்வுகளுக்கு கட்டியம் கூறும் மாதம் மார்கழி. வருடத்தின் இதர நாட்களில் மேற்கொள்ளும் தரிசனம் செய்து சிறப்புப் பெற்றாலும், வெளியே பனி கொட்டினால் என்ன, மழை பெய்தால் என்ன, எதனையும் . பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து, ஆண்டாள் மற்றும் ஸ்ரீரெங்கமன்னாரை தரிசித்து மென்மேலும் அவர்கள் புகழைப்பாடும் மாதம் மார்கழி.

 

Related image

உஷத்காலத்திலேயே தூக்கத்தை உதறி எழுந்து வீடு மற்றும் கோவில் வாசல்களில் வண்ண மயமான கோலங்கள் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலங்களை மலர்களால் அலங்கரித்து வரவேற்கும் மாதம் மார்கழி. ஓசோன் படலம் நமது பூமிக்கு மிக அருகில் இருப்பதால் சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேண அதிகாலை வழிபாடு மேற்கொள்ளப்படும் மாதம் மார்கழி. ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி, ஏன் ஹோலி பண்டிகை கூட பக்தி ரசம் சொட்டச் சொட்ட கொண்டாடப்படும் மாதம்
மார்கழி.

Image result for மார்கழி மாதம் பஜனை

மார்கழி முழுவதும தினமும் அதிகாலை எழுந்து நீராடி, அரங்கனைப் பாடி, அவரையே மணாளனாக அடைந்தாள் ஆண்டாள். திருவில்லிபுத்தூர் கோவிலில் தினமும் அதிகாலை நடை திறக்கபட்டு, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாடப்படுகிறது. கண்ணனுக்கு ஆட்பட்டு ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு பக்தியுடன் தெய்வீகப் பணி மேற்கொண்டு,

 

”எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம்; உமக்கே நாம் ஆட்
செய்வோம்; மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்” என்கின்ற கோதை நாச்சியாரின் கூற்றிக்கேற்ப திருமாலின் திருவடிப் பேற்றிற்கு ஆளாக வேண்டுமென்று அவன் தாளைத் துதித்து நிற்பதே திருப்பாவையின் தாத்பர்யம்.

Image result for மாணிக்க வாசகர்

மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகத்திலுள்ள பாவைப் பாட்டிற்குத் திருவெம்பாவை என்று பெயர். திருவெம்பாவையில் இருபது பாடல் களும் திருப்பள்ளி எழுச்சியில் பத்துப் பாடல்களும் உள்ளன. ‘திரு’, ‘எம்’, ‘பாவை’ என்பவற்றின் கூட்டாக திருவெம்பாவையைக் காணலாம். இதில் ‘திரு’ தெய்வத் தன்மையையும், ‘எம்’ உயிர்த் தன்மையையும், ‘பாவை’ வழிபாட்டிற்குரிய திருவுருவத் தன்மையையும் குறிப்பிடுகின்றன. கன்னிப் பெண்கள் அதிகாலை துயிலெழுந்து ஒருவரை ஒருவர் அழைத்துச் சென்று ஆறு, குளம் முதலிய நீர் நிலைகளில் நீராடி
இறைவன் புகழ்பாடி பாவை நோன்பு நோற்பதை பளிச்சென்று காட்டுகின்றன திருவெம்பாவைப் பாடல்கள்.

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் மூலம் பாரத நாட்டில் நல்ல மரபை உருவாக்க அக்காலத்திலேயே முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. மக்கள் உறக்க நிலையை நீக்கி விழிப்பு நிலை எய்த வேண்டும், நாடு நலம்பெற ஒழுங்காக மழை பொழிய வேண்டும், கன்னிப் பெண்கள் தாங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணைவர்களை அடைந்து நல்வாழ்வு வாழ வேண்டும், சிவத்தொண்டு நாடொறும் சிறக்க வேண்டும் என்பதே பாவை நோன்பின் நோக்கம்.