மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

“விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப் பாதம் தந்து அருள வந்து அருளும் நேசன்,” என்கிறது திருவெம்பாவை இரண்டாவது பாடல். பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சிகள்  திருவெம்பாவையில் வருகின்றன.

“அழகான நகைகளை அணிந்தவளே! ஜோதியே  வடிவான அண்ணாமலையார் மீது சிகரம் தொடும் அளவுக்கு அபார  பக்தி கொண்டுள்ளேன் என்று நேற்று  உன்னை உயர்த்திப் பேசினாய். அல்லவா ?  இப்போது நோன்பு சகிதம்  அவரை வணங்கும் முன் மார்கழி நீராடலுக்கு அழைத்தால் பஞ்சணையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு  சுகத்தில் அயர்ந்து உறங்குகிறாய்,” என்கிறார்கள் தோழிகள். உறங்கிய தோழி அவர்களிடம், ” சீச்சி! கேலிப்பேச்சு பேசாதீர்கள் . நான்  அயர்ந்து தூங்கினேன் என்பது உண்மைதா ன் . அதற்காக இப்படியா பேசுவது?” என்றாள். பதிலளித்த தோழியர்,””செல்லமே! இது கேலிப் பேச்சு என்ற கோபம் வேண்டாம். ஓளி பொருந்திய  திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களால் கூட முடியவில்லை. ஆனால் நாம் புண்ணியம் செய்தவர்கள். இதோ நமது  வீட்டுக்கே சப்பர பவனியாக  வருகிறான் சர்வேஸ்வரன்,”

”  தேவப்பிறவியை விட மானிடப்பிறவியே மேல் என்பது திருவெம்பாவை தரும் அழுத்தமான செய்தி. அதாவது தேவர்கள் தன் பாதங்களில் விழுகையில் கூசிப் பின்னுக்கு இழுத்துக்கொள்ளும் ஈசன், தானே தேடி வந்து பூமிதனில் அடியார் மனம் மகிழ  அடியார்க்குத் தன் பதம் காட்டி ஆட்கொள்ளுவான்! அப்படிப்பட்ட பூமியில் போய்ப் பிறக்காமல் அவமே நாள் போக்குகின்றோம் என்கிறார் அவர். சிவலோக நாதனும், தில்லையில் நடனம் புரிபவனுமான அவன் மீது, நீ கொண்ட பாசத்தில் துளியளவு கூட குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே அவசரப்படுத்துகிறோம்,” என்றனர் எழுப்பிவந்த தோழி கள் . கோயிலுக்கே போகாதவர்களையும் அணைத்துக் கொள்ள இறைவன் தேடி வருகிறான். அப்போதும், அவன் முகத்தைப் பார்க்க தயாராயில்லை என்றால் பிறப்பற்ற நிலை எப்போது தான் கிடைக்கும் என்பது பாடலின் உட்கருத்து