மாணவர் சங்க தேர்தல் ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் சங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., வலியுறுத்தி உள்ளது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசியச் செயலர் ஷிரவன் ராஜ், மாநிலச் செயலர் யுவராஜ் தாமோதரன் ஆகியோர் இணைந்து அளித்த பேட்டி: ஏ.பி.வி.பி., தேசிய மாநாடு, கடந்த டிசம்பர் 7 முதல் 10ம் தேதி வரை, டில்லியில் நடந்தது. 20 நாடுகளில் இருந்து, 10,000த்துக்கும் அதிகமான மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். அந்த நாட்களில் கடும் மழை, வெள்ள பாதிப்பு இருந்தபோதும், தமிழகத்தில் இருந்து 300க்கும் அதிகமானோர் அதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், தமிழகத்தின் கல்வி நிலையங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்படுவதில்லை. மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய மட்டும், தேர்தல் நடத்தினால் போதாது.

கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தினால், ஜனநாயகம் முழுமை அடையும். எதிர்காலத்தில் திறன்மிக்க தலைவர்கள் கிடைப்பர். அவர்கள் முன் கூட்டியே அடையாளம் காணப்படுவர். எனவே, தமிழகத்தில் உடனே மாணவர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.