மணிப்பூர் மெத்தாம்பெட்டமைனுக்கு மவுசு போதை கடத்தல் தடுப்பு அதிகாரி தகவல்

 

கடத்தல்காரர்களால், ‘ஐஸ்’ என, அழைக்கப்படும் மெத்தாம்பெட்டமைனுக்கு தற்போது மவுசு அதிகம் என்பதால், அதற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்’ என, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:
ஆந்திராவில், அக்டோபரில் கஞ்சா விதைகள் பயிரிடப்பட்டு, ஜனவரியில் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது அறுவடை காலம் என்பதால், தமிழகம், தெலுங்கானா, கேரள மாநிலங்களில், கஞ்சா புழக்கம் அதிகளவில் உள்ளது. கஞ்சா கடத்தல் தொழிலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் தான் அதிகம். ஆந்திர மாநிலத்தின், மலை பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை, தண்ணீரின் சுவைக்கு ஏற்ப விளையும் கஞ்சாவுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

அதிலும், ஆந்திர மாநிலத்தின், ‘சீலாவதி’ என்ற கஞ்சாவுக்கு, ‘டிமாண்ட்’ அதிகம்.

இடைத்தரகர்களை ஒழித்தால், கஞ்சா புழக்கம் இல்லை என்ற நிலையை உருவாக்கி விடலாம். அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆந்திராவில் ஓராண்டில், 204 ஏக்கரில் பயிரிடப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டு உள்ளது.

கஞ்சாவுக்கு, ‘இலை, பச்சை’ என, மறைமுக பெயர் உண்டு. தற்போது, கஞ்சா பயிரிடுவதில் ஆந்திராவை முந்திவிட்டது ஒடிசா.

அதேபோல, மெத்தாம்பெட்டமைனுக்கு,’கல், ஐஸ்’ என்ற பெயர் உண்டு. சந்தையில் மணிப்பூர் ஐஸ்சுக்கு மவுசு அதிகம்.

இந்த மாநிலத்தில் இருந்து தான் மெத்தாம்பெட்டமைன் அதிகளவில் கடத்தப்படுகிறது. அதற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். சமீபத்தில் எட்டு பேரை கைது செய்து, 15 கிலோ மெத்தாம்பெட்டமைனை பறிமுதல் செய்துஉள்ளோம் ஆப்கானிஸ்தானில் இருந்து, ஓபியம், ஹெராயின் அதிகளவில் கடத்தல் நடக்கிறது. ‘ஆசிஷ்’ என்ற கஞ்சா எண்ணெய்க்கு கருப்பு, சூடோ எபிட்ரின்னுக்கு பவுடர், கோகைனுக்கு கோக்கனட் என பெயரிட்டு கடத்தல் நடக்கிறது.

விமானம் வாயிலாக 20 சதவீதமும், சாலை மற்றும் கடல் மார்க்கமாக 80 சதவீதமும் போதை பொருள் கடத்தல் நடக்கின்றன. இலங்கையில் பொருளாதார சீரழிவு, வேலை வாய்ப்பு இன்மை காரணமாக, போதை பொருள் கடத்தல் தொழில் அதிகளவில் நடக்கிறது.

இலங்கை போதை பொருளுக்கான நாடு என்பது போல மாறி விட்டது. அங்கு இருந்து தான், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. தமிழகத்தில், நாகை மாவட்டம் கோடியக்கரை, ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி., பட்டினம், ராமேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம் மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தல் நடக்கின்றன.

கிலோவுக்கு, 10,000 ரூபாய் கிடைப்பதால், போதை பொருட்களை படகில் ஏற்றிச்சென்று நடுக்கடலில் கை மாற்றிவிடும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

போதை பொருட்கள் கடத்தலில் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. அவர்களுக்கு இணையாக நைஜீரியர்கள் உள்ளனர். இவர்களை குறி வைத்து கைது செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.