மாட்டுக்காரன் தான் நாலும் தெரிந்த ரூட்டுக்காரன்!

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த அண்ணாமலை” என்ற படம். ஏழை கதாநாயகனுக்கும் அவரது பணக்கார நண்பருக்கும் இடையே மோதல் ஏற்படும். உன்னை விட நான் பெரிய ஆளாகி காட்டுகிறேன் பார்!” என்று கதாநாயகன் சவால் விடுவார். அதற்காக, அவர் தேர்ந்தெடுப்பது, பால் சார்ந்த பொருள்களின் உற்பத்தியை. ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே கதாநாயகனின் சபதம் நிறைவேறுகிறது. பசு பொருள்களின் மூலம், நம் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயருகிறது என்பதைக் காட்டும் திரைப்படம் அது.

காமதேனு என்றால் பசு. பசு இருந்தால் தேவையான அனைத்தையும் பெறலாம் என்பதை இதிகாசங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. பணம் என்ற வழிமுறை உருவாகுவதற்கு முன்னால் பசுக்களை வைத்தே வணிகங்கள் நடந்துள்ளன. கோ தானமும், கோ பூஜையும் இல்லாத வழிபாடுகளே இல்லை எனலாம். இதெல்லாம் நாம் பசுக்களுக்கும் நாட்டு மாடுகளுக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தோம் என்பதைக் காட்டுகிறது.

ஒரு வீட்டில் பசு இருந்தால், பால், தயிர், நெய் என்று சகல பொருள்களும் தேவையான அளவுக்குக் கிடைக்கின்றன. பசு சார்ந்த உணவுகளால் உடலுக்கு ஆரோக்கியம்.

அது மட்டுமல்ல, ஒரு வீட்டில் நல்ல கறவை பசு இருந்தால், வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைகிறது. இயற்கையை மையமாக வைத்தே வழிபாடுகளை அமைத்த ஹிந்துக்கள், பசுவை தெவமாக வணங்குகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்படும்போது, நம் நாட்டில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதைச் சார்ந்த தொழில்களையுமே நம்பி வாழ்வது தெரிய வருகிறது. தொடர்ச்சியான நல்ல விளைச்சலுக்கும், ஆரோக்கியமான உணவு வகைகளுக்கும் இயற்கை சார்ந்த விவசாய முறையே தேவை. இயற்கை வேளாண்மை என்பது நாட்டு மாடுகளைச் சார்ந்தே இருக்கிறது.

தமிழகத்தில் அண்மையில் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிய அளவில் நாட்டு மாடுகளின் தேவைகளைப் பற்றியும் விழிப்புணர்வு எழுந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கூட, திருவிழாக்களின் மாட்டு சந்தை அமைத்து, நாட்டு மாடுகளை விற்பது தமிழரின் கலாசாரம். காங்கேயம் காளை போன்ற நாட்டு மாடு வகைகள் சர்வதேச பிரசித்தி பெற்றவை. ஆனால், தற்போது அத்தகைய சந்தைகள் குறைந்து வருகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, நாட்டில் 20 கோடி நாட்டு மாடுகள் இருந்தன. அப்போதைய மக்கள்தொகை 40 கோடி. தற்போது, நாட்டின் மக்கள்தொகை 125 கோடிக்கு மேல். நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.  ஆவினம் காப்போம்! பாரத பொருளாதாரம் காப்போம்!