மறக்க முடியாத மருது சகோதரர்கள்

வேலுநாச்சியாரின் மறைவைத் தொடர்ந்து சிவகங்கைச் சீமை மருது சகோதரர்கள் ஆளுகையின்கீழ் வந்தது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிய போதும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்துக்கு இணையாக கோபுரம் கட்ட ஆசைப்பட்டு காளையார்கோயில் கோபுரத்தை கட்டி எழுப்பினர் மருது சகோதரர்கள்.
இவர்களின் துணிச்சலால், பிற பாளையக்காரர்களுக்கும் போராடும் எண்ணம் ஏற்பட்டுவிடும், என கருதிய ஆங்கிலேயர்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர்.

உடையத்தேவன் என்ற உளவாளி கொடுத்த தகவலால் மங்கலம் எனும் ஊரில் மருது சகோதரர்களை சுற்றி வளைத்தனர். அவர்களை பிடிப்பது கடினம் என்பதால் மருதுசகோதரர்கள் சரணடையவில்லையென்றால் காளையார்கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என அறிவிப்பு செய்தார்கள். கோயில் கோபுரம் இடிபடுவதை விரும்பாத மருதுசகோதரர்கள் சரணடைந்தனர்.
எங்கள் உயிரை பறித்ததும், எங்கள் உடலை காளையார் கோவிலில் நாங்கள் கட்டிய கோபுரத்துக்கு எதிரில் புதைத்துவிடுங்கள். இதை எங்கள் மரண சாசனமாக கூட நீங்கள் எடுத்துகொள்ளலாம்” என்று சிறிதும் தயக்கமின்றி ஆங்கிலேயர்களிடம் கூறினார்கள்.
மருது பாண்டியர்கள் கைது செய்யப்பட்டு திருப்பத்துார் அழைத்து வரப்பட்டு அவர்களுடன் அங்கு அவர்களின் குடும்பத்தார், உதவியவர்கள் என 500 பேரை துாக்கிலிட்டு கொன்றனர் ஆங்கிலேயர்கள். மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டு கயிற்றில் தொங்கிய நிலையில்கூட ஆங்கிலேயர்கள் அவர்கள் அருகில் செல்ல அச்சமடைந்தனர் என்றால், ஆங்கிலேயர்களுக்கு எந்த அளவுக்கு மருது சகோதரர்கள் மீது பயம் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

வீரத்தின் விளைநிலமாக விளங்கிய மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று.