மத்திய பிரதேசத்தில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் பாஜக சேர உள்ளனர்…

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் 15 மாதங்களாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு இளம்தலைவராக திகழ்ந்து வந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சி மேலிடத்துடன் நிலவிவந்த பனிப்போரின் உச்சகட்டமாக கடந்த 10-ந் தேதி காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகினர்.
சட்டசபையின் மொத்த இடங்கள் 230. ஏற்கனவே 2 காலியிடங்கள் இருந்த நிலையில், மேலும் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் சட்டசபையின் பலம் 206 ஆனது. இதனால் மெஜாரிட்டி பலம் 104 ஆக குறைந்தது.
அதே நேரத்தில் காங்கிரசின் பலம் 114-ல் இருந்து 92 ஆக குறைந்தது. அந்த கட்சி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசானது. ஆனால் கவர்னர் உத்தரவிட்டபடி முதல்-மந்திரி கமல்நாத் கடந்த 16-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை.
இதனையடுத்து கமல்நாத் ராஜினாமா செய்தார்.  அதை கவர்னர் லால்ஜி தாண்டன் ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்களான எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.