மதுரை நகரில் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்: மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவிப்பு

மழைநீர் வடிகால் வசதியில்லாத நிலையில் சிறிய மழைக்கேமதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில நாட்களாக வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. மதுரை நகர் பகுதியில் 2 நாட்களாக மாலை முதல் இரவு வரை அடை மழை பெய்தது. இதனால் மீனாட்சியம்மன் கோயில் பகுதிகள், பெரியார் பேருந்து நிலையம், பை பாஸ் சாலை, பழங்கா நத்தம், அண்ணா நகர், மாட்டுத் தாவணி, அய்யர்பங்களா, ஒத்தக்கடை, கே.கே.நகர், செல்லூர், கோமதிபுரம், தல்லாகுளம், கோரிப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது பெரியாறு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைப் பணிகள், புதிய சாலை அமைக்கும் பணிகள் நடப்பதால் நகர் முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

சோலை ராஜா சாலைகளில் தண்ணீர் ஓடும் போது பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். பல இடங்களில் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடாததால் அந்தச் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுகின்றன. குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி தனித் தீவுகளாக உள்ளன. மதுரை தளவாய் அக்ரஹாரம் தெருவில் தேங்கிய மழைநீர்.

மழைநீர் கால்வாய்கள், மழை நீர் வாய்க்கால்களை மாநகராட்சி முறையாகப் பராமரிக் காமல் கைவிட்டதால் ஒரு நாள் மழைக்கே தாங்காமல் வெள்ளக்காடாக மாறி விடுகிறது. ரூ.991 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோயிலைச் சுற்றி முறையான வடிகால் வசதிகள் அமைக்கப்படவில்லை. அதனால் திட்டம் முடிந்த பிறகும் மாசி வீதிகள், சித்திரை வீதிகள், வெளி வீதிகள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. கோயிலுக்கு தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அதுபோக தீபாவளி புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஆயிரக் கணக்கான மக்கள் பஜார் பகுதிக்கு வருகின்றனர்.

ஏற்கெனவே சாலைகளில் முறையான பார்க்கிங் வசதி இல்லை. இந்நிலையில், தற்போது மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் தீபாவளி பொருட் கள் வாங்கிச் செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர். மீனாட்சியம்மன் கோயில் அருகே தளவாய் அக்ரஹாரம் முதல் வடக்கு மாசி வீதி வரை மழைநீர் தெப்பம்போல் தேங்கி யுள்ளது.

இது குறித்து மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கவுன்சிலருமான சோலை ராஜா கூறியதாவது: பருவ மழைக்கு முன்பே நடந்த மாநகராட்சிக் கூட்டங்களில் நகரில் உள்ள 13 மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வார வலியுறுத்தினேன். அவ்வாறு தூர்வாரியிருந்தால் தற்போது நகர் பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி இருக்காது.

அதேபோல ஒவ்வொரு தெருவில் இருக்கும் கால்வாய்களையும் தூர்வாரவில்லை. அதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இனி மழைக்காலம் முழுவதும் மக்களுக்கு சிரமம் தான். மீனாட்சிம்மன் கோயில் பகுதிகளில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற வக்கீல் புதுத்தெரு பகுதியில் இரு மழைநீர் வடிகால் குழாய்கள் வைப்பதாகக் கூறினர். ஆனால் அவ்வாறு அமைக்காததால் கோயிலைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. மதுரையின் பெருமையான மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி தேங்கும் மழைநீரையே மாநகராட்சியால் அகற்ற முடியவில்லை. அடித்தட்டு, நடுத்தர மக்கள் வசிக்கும் மற்ற வார்டுகளின் நிலைமை பரிதாபம் தான். இவ்வாறு அவர் கூறினார்.