நவ.13 ல் கேதார – கெளரி விரத நோன்பு: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மறுநாள் திங்கள்கிழமை கேதார – கெளரி விரத நோன்பு வருவதால் அன்று தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல் போன்றபண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருவது வழக்கம். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி வரும் நவ.12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வருகிறது. இதனால் தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை (கேதார – கெளரி விரத நோன்பு) விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த ஆண்டு தீபாவளி அக்.24-ல் கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படும் என அக்.22-ல் அரசு அறிவித்தது. இதனால் கடைசிநேர அறிவிப்பால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும், மீண்டும் பணிக்கு திரும்புவதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டாவது முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.