மதுராவில் கோயிலை இடித்து மசூதி கட்டினார் அவுரங்கசீப்: தகவல் உரிமை சட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்

மதுராவில் கோயிலை இடித்துவிட்டு அவுரங்கசீப் மசூதியை கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ இப்பதிலை அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் மெயின் புரியை சேர்ந்தவர் அஜய் பிரதாப் சிங். இவர், ஏஎஸ்ஐயிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஏஎஸ்ஐ-யின் ஆக்ரா பிராந்திய அலுவலகம் பதில் அளித்துள்ளது. இதில், மதுராவிலிருந்த கோயிலைஇடித்துவிட்டு முகலாயப் பேரரசர்அவுரங்கசீப் அங்கு ஷாயி ஈத்காமசூதியை கட்டியதாக ஏஎஸ்ஐதெரிவித்துள்ளது. எனினும், அக்கோயிலை கிருஷ்ண ஜென்மபூமி எனக் குறிப்பிடாமல் கேசவ்தேவ் கோயில் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக 1920-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் பதிவான அரசு கெஜட் குறிப்புகளைகாட்டியுள்ளது.
அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது கிருஷ்ண ஜென்மபூமி கோயில் என ஏஎஸ்ஐ நேரடியாகக் குறிப்பிடவில்லை. தற்போது கிருஷ்ண ஜென்மபூமி என்று அழைக்கப்படும் கிருஷ்ணர் கோயில் முந்தைய காலங்களில் கேசவ்தேவ் கோயில் என்று அழைக்கப்பட்டது. இதன் காரணமாக, மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏஎஸ்ஐ தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், அயோத்தியை போல், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாயி ஈத்கா மசூதி மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன் மேல்முறையீட்டு வழக்குகள் உ.பி.யின் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் நடைபெறுகிறது. இந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளில், மசூதி நிலத்தை முஸ்லிம்கள் கோயிலுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய ஆதாரமாக தற்போது ஏஎஸ்ஐ அளித்த தகவல் பயன்படும் எனக் கருதப்படுகிறது.
இதுபோல், ஆக்ராவின் தாஜ்மகால் தொடர்பாகவும் ஆர்டிஐ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஏஎஸ்ஐ அளித்த பதிலின் அடிப்படையில் தாஜ்மகாலில் நடைபெறும் முகலாயப் பேரரசர்ஷாஜஹான் உருஸ் விழாவுக்கு தடை கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஷாயி ஈத்கா மசூதி மீது வழக்கு தொடுத்த வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் கூறும்போது, ‘‘இந்த மசூதி மீதான வழக்கு பிப்ரவரி 22-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஏஎஸ்ஐ அளித்ததகவலை முக்கியமாக முன்னிறுத்தி வாதம் செய்ய உள்ளோம்” என்றார். வாராணசியின் கியான்வாபியை போல், மதுரா மசூதியிலும் களஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கள ஆய்வுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை வரும் ஏப்ரல் வரை தொடரும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற களஆய்வு வாராணசி கியான்வாபி மசூதியிலும் கடந்த ஆண்டு ஏஎஸ்ஐ சார்பில் நடத்தப்பட்டது. அதில், இந்து கோயிலை இடித்துவிட்டு அம்மசூதியைக் கட்டியதற்கான பல்வேறு தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்ததாக தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.