நாட்டை பிரிக்க நினைக்கிறது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு

‛ காங்கிரஸ் கட்சி நாட்டை பிரிக்க நினைக்கிறது” என ராஜ்யசபாவில் பேசும்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அளித்த பதிலுரை: நாட்டின் 75வது குடியரசு தின கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டை வலுப்படுத்துவது பற்றிய ஜனாதிபதியின் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பார்லியில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

லோக்சபாவில் நடந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ராஜ்யசபாவில் கார்கே சரி செய்துவிட்டார். வரும் தேர்தலில் 400 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என கார்கே ஆசி வழங்கி உள்ளார். காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது.

நான் பேசுவதற்கு மக்கள் எனக்கு அதிகாரம் வழங்கி உள்ளார்கள். எங்கள் பேச்சை கேட்கக்கூடாது என முடிவு செய்து திட்டமிட்டே நீங்கள் வந்துள்ளீர்கள். நாட்டு மக்கள் எங்களது பேச்சை கேட்க முடிவு செய்துள்ளார்கள். மக்கள் கேட்க துவங்கி விட்டனர். எதிர்க்கட்சிகளால் என் குரலை ஒரு போதும் ஒடுக்க முடியாது. பதவி வெறியில் உள்ள காங்கிரஸ் ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ளது. அக்கட்சி ஆட்சியில் அவசர நிலை உள்ளிட்ட எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடந்துள்ளன. நாட்டை வடக்கு தெற்கு என பிரிக்கவும் நினைக்கிறது. எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது என நானே கவலைப்படுகிறேன். வரும் தேர்தலில் 40, 50 இடங்களாவது அக்கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்தனை செய்கிறேன். காங்கிரசால் அதன் தலைவர்களுக்கே உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை. காங்கிரஸ் என்ற நோயாளிகளுக்கு டாக்டரால் கூட சிகிச்சை அளிக்க முடியாது.

நக்சல் பயங்கரவாதத்தை வளரவிட்டு மிகப்பெரிய பிரச்னையாக்கியது காங்கிரஸ் ஆட்சி. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மறுத்தது. சொந்த குடும்பத்தினருக்கும், வாரிசுகளுக்கு மட்டும் அந்த விருதை வழங்கியது. காங்கிரஸ் தலைவர்களின் எண்ணங்கள் காலாவதி ஆகிவிட்டன. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களை தொடர்ந்து பின்பற்றியது. அந்த சட்டங்களை நீக்காதது ஏன்? பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தையும் ஆங்கிலேயர் பாணியையே கடைபிடித்தது. பா.ஜ., ஆட்சியில் ஆங்கிலேயர் கால சட்டங்களை மாற்றுகிறோம் அல்லது நீக்குகிறோம். ஆங்கிலேயர் காலத்து மரபுகளை நீங்கள் பின்பற்றியது ஏன்?

விவசாயிகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானதாக இருந்தது. அவர்கள் அதிகாரம் பெறுவதற்கு எதிராகவும் இருந்தது. இந்தியர்களையும், இந்தியாவையும் அவமதித்ததற்கான விலையை அக்கட்சி செலுத்தி வருகிறது. அதன் கொள்கைகளுக்கு உத்தரவாதம் இல்லை. தனது கொள்கைகளுக்கு உத்தரவாதம் இல்லாத காங்கிரஸ், எனது உத்தரவாதம் குறித்து கேள்வி எழுப்புகிறது.

காங்கிரசின் ஊழலால் மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். பொருளாதாரம் 12வது இடத்திற்கு சென்றது. பொருளாதார வளர்ச்சி போதுமானதாக இல்லை என காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்தார். வரி வசூலில் ஊழல் நடப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். பா.ஜ., வின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 5வது இடத்திற்கு வளர்ந்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு சட்டத்தை பல தசாப்தங்களாக காங்கிரஸ் உயிர்ப்புடன் வைத்து இருந்தது. இந்த சட்டத்தை நீக்கி மக்களுக்கு உதவினோம். முன்னாள் பிரதமர் நேரு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடிதம் எழுதினார். நேரு, தனது ஆட்சி காலத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டாம் என முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். காஷ்மீரில், காங்கிரஸ் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படவில்லை. வால்மீகி சமுதாயத்தினருக்கு அம்மாநிலத்தில் குடியுரிமை வழங்கபபடவில்லை. ஒபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ., தான் நிறைவேற்றியது. காஷ்மீர் சிறப்பு சட்ட அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு தான், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை கிடைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னைக்கு வித்திட்டது காங்கிரஸ் கட்சி. நாட்டின் நிலத்தை எதிரிகளுக்கு தாரை வார்த்த காங்கிரஸ் பாதுகாப்பு பற்றி பேசுகிறது. வளர்ந்த பாராதமாக மாற மோடி 3.0 தேவைப்படுகிறது. அப்போது நாட்டின் அடித்தளம் வலுப்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொதுப்போக்குவரத்து வலுப்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி விவகாரத்தில் நாட்டை வடக்கு தெற்கு ஆக பிரிக்க சிலர் நினைக்கின்றனர். வறுமையில் இருந்து மீண்ட மாநிலங்களும் கூடுதல் நிதியை கேட்கின்றன.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.