மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் மத்திய நிதி அமைச்சர் தூய்மை பணி

மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில், தூய்மை இந்தியா சார்பில் கோயில் வளாகத்தில் தூய்மை பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில், தூய்மை இந்தியா சார்பில் கோயில் வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டார். முன்னதாக, நிதியமைச்சருக்கு கோயிலில் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கோயில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் அமைச்சர் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அயோத்தி ராமர் கோயிலில் ஜன.22-ல் (இன்று) பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கக் கூடாது என இந்து அறநிலையத் துறை தடை விதித்துள்ளதாக, செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியானது.
மேலும் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களில் தொலைக்காட்சி மூலம் பொதுமக்கள் காண்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் தன்னார்வமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் நபர்களிடம், நான் கேட்டதற்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்கு, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நான் வதந்திகளை பரப்புவதாகவும் ‘வதந்தீ’ பரப்பாதீர்கள் எனவும் பதில் தருகிறார். நான் வதந்திகளைப் பரப்பவில்லை. அறநிலைத் துறை அமைச்சர் இந்துக்களுக்கு எதிராகவும் இந்துக்கள் பூஜை செய்வதற்கும் ஒத்துழைக்காமல் இருக்கிறார்.
சில இடங்களில் நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கப்பட்ட இடங்களில், போலீஸார் நேரில் சென்று அனுமதியில்லை எனத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, பல்வேறு இடங்களிலிருந்து எனக்கு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, யாரேனும் கேள்வி கேட்டால், தங்களுக்கு அனுமதி கடிதம் வரவில்லை என பொதுப்பணித் துறை மற்றும் காவல் துறையின் தரப்பிலிருந்து பதில் அளிப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மகளிர் அணித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.