மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேணும்!

நம் நாட்டில் பலதரப்பட்ட சந்தைகள் உள்ளன. அவற்றுள் மிக விசேஷமான ஒரு சந்தை, மணிப்பூர் தலைநகரமான இம்பாலில் உள்ள ‘இமா கெய்தால்’. 5,000 வணிகர்கள் கொண்ட பெரும் சந்தையான இது சுமார் 500 வருடம் பழமையானது. ஆனால் இந்த சந்தையின் உண்மையான சிறப்பு இந்த சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவரும் பெண்கள் என்பதே. ஆம், ஆசியாவின் ஏன் உலகிலேயே பெண்களால் நடத்தப்படும் மிகப்பெரும் சந்தை ‘இமா கெய்தால்’ தான்.

இந்த சந்தை 16ம் நூற்றாண்டில் துவங்கப் பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் அந்த காலக்கட்டத்தில் ‘லாலுப்-காபா’ என்ற தொழில் திட்டத்தால் மணிப்பூரில் உள்ள ஆண்கள் போர்க்களத்திலும், தொலைவில் உள்ள விவசாய நிலங்களிலும் வேலை செய்ய வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இதனால் கிராமங்களில் உள்ளப் பெண்களே வீட்டுப் பராமரிப்புடன் விவசாயம், வாணிபம், பொருளாதாரம் போன்ற அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது.
வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில் வாணிபம் தொடர்பாக கடுமையான விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து 1939ம் ஆண்டு மணிப்பூர் பெண்கள் ஒன்றுதிரண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கினர். இதனை ‘நூபி லான்’ (பெண்களின் யுத்தம்) என்று அழைத்தனர். இமா கெய்தாலை சேர்ந்த வணிகர்கள் புதிய வணிக கொள்கைகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி ஆங்கிலேயரின் கைப்பாவையாக செயல்பட்ட மன்னருக்கு எதிராகப் போராடினர். போராட்டத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள், சந்தையில் உள்ள கட்டிடங்களை அந்நிய நாட்டினருக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் விற்க முயற்சி செய்தனர். ஆனால் இமா கெய்தாலை பாரம்பரிய சின்னமாக கருதிய பெண் வணிகர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர்.


பாரத விடுதலைக்குப் பின் இந்தச் சந்தை சமூகம், அரசியல் சார்ந்த கருத்து பரிமாற்றத்திற்கான இடமாக மாறியது. மக்கள், நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள இந்த சந்தைக்கு வந்து செல்வர்.
இந்த சந்தையில் திருமணமான பெண்களே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தையின் நிர்வாகத்தைப் பெண் வியாபாரிகளின் நலச்சங்கம் கவனித்து வருகிறது. பெண்கள் இந்த சங்கம் மூலமாக தங்கள் வியாபாரத்திற்கு பொருள் வாங்க கடன் பெற்றுகொண்டு, பொருளை விற்றுக் கடனை திருப்பி அடைக்கலாம்.
மணிப்பூர் மக்களால், ‘சந்தைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் இமா கெய்தால், மணிப்பூர் மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறையின் அடையாளம் மட்டுமன்றி, பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்புக்கும் திறமைக்கும் முக்கிய சான்றாகவும் அமைந்துள்ளது.