மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு

“பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்” என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், “நேற்று மாலை பாஜகவின் தமிழகத்தின் பொறுப்பாளர் அர்விந்த் மேனன், தமாகா அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் தமிழக அரசியல் சூழல், மக்களவை தேர்தல் குறித்து பேசினோம். அப்போது, நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். நேற்று காலை பாஜக மேலிட தலைவர்களும் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளது. பிரதமர் மோடி அவர்களை, பிரதமராக வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிப்பதாக தமாகா முடிவெடுத்துள்ளது. மூப்பனார் காலத்தில் தொடங்கப்பட்டதில் இருந்து பிராந்திய கட்சியான தமாகா தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமாகாவின் கருத்துக்களை முறையாக கேட்டு, தமிழகத்தின் நலனுக்காக எந்த இயக்கம் மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இன்றைய சூழலில், தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு இதை விரும்பம் மத்திய அரசு உள்ளது. அதற்கு பிரதமரை கோடிட்டு காண்பித்து பல உதாரணங்கள் சொல்ல முடியும். மேலும், இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலித்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இரண்டு முறை பல மாநில மக்களின் ஆதரவை பெற்று வென்ற கட்சி பாஜக. தமிழக வாக்காளர்கள் அதனை கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் மூன்றாவது முறை பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும். ஏழை எளிய மக்களின் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

படித்தவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறை பாஜகவின் வெற்றி என்பது உலகளவிலேயே இந்தியாவை 3வது பொருளாதார நாடாக மாற்ற கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்தும். தமிழக மக்கள் இதனை நன்கு உணரத் தொடங்கியிருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தமாகா மக்களைச் சந்திக்கும்.

கரோனாவுக்கு பிறகு ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வோர் நிலையில் உள்ளன. ஆனால் மத்தியிலும் ஆளும் ஆட்சியாளர்களால் இந்த காலகட்டத்தில் இந்தியாவை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மாறியது. இந்த நாடு விவசாய நாடு. விவசாயத்துக்கு முக்கியதத்துவம் கொடுக்கும் கட்சியாக மத்திய பாஜக செயல்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு தற்போது மக்கள் விரோத அரசாக செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்தியாவிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுகிற அரசு என்றால் அது திமுகதான். மழை, வெள்ளத்தின் போது மெத்தனமாக செயல்பட்டது. தமிழக அரசின் செயல்பாடு மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறோம். வரும் நாட்களில் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம். நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சிகள் தமிழகத்தில் இருந்து இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். சில நாட்களில் பாஜக கூட்டணி முழுமை பெறும். மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அதன்பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.