அமைச்சர் பெரியசாமிக்கு சிக்கல்: வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீடில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் இன்று ரத்து செய்தது. இந்த உத்தரவால் அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டலாம் என கூறப்படுகிறது.

2006 முதல் 2011 வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தவர் பெரியசாமி. இவர் வீட்டு வசதி வாரிய நிலத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்த உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார்.

அமைச்சர் பெரியசாமி சார்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர்ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, இந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று காலை உத்தரவு பிறப்பித்தார். 2024 ஜூலைக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டுள்ளது. மார்ச் 28 க்குள் கோர்ட்டில் ஆஜராகி அமைச்சர் பெரியசாமி ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அமைச்சர்களாக இருப்பவர்கள் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.