மகாபாரதத்தில் கிருஷ்ணர் 5 கிராமங்களை கேட்டார்; இந்துக்கள் 3 இடங்கள்தான் கேட்கின்றனர் – யோகி ஆதித்யநாத் கருத்து

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு 5 கிராமங்களை அளிக்க வேண்டும் என கிருஷ்ணார் கேட்டார்.ஆனால் இந்துக்கள் தங்கள்தெய்வங்களின் நம்பிக்கை தொடர்புடைய 3 மையங்களுக்குத்தான் உரிமை கோரினர் என உ.பி சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகேயுள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் பாதாள அறையில் உள்ள வியாஸ் மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாராணசி நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம், மதுராவில் உள்ள கேசவ்தேவ் (கிருஷ்ணர்) கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஷாயி ஈத்கா மசூதியை கட்டினார் என பதில் அளித்தது. இந்நிலையில், உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: நாங்கள் வாக்குறுதி அளித்தபடி அயோத்தியில் ராமர் கோயில்கட்டப்பட்டுவிட்டது. அங்கு பகவான்ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

துரியோதனன் பிடிவாதம்: மகாபாரத காலத்தில், ‘‘கவுரவர்களிடமிருந்து ராஜ்ஜியத்தில் பாதியை பாண்டவர்களுக்கு அளிக்க வேண்டும். இதுசிரமம் என்றால் 5 கிராமங்களையாவது கொடுக்க வேண்டும்’’ என கிருஷ்ணர் கேட்டார். ஆனால் ஊசி அளவுக்கு கூட நிலம் தரமாட்டேன் என துரியோதனன் கூறினார். பிடிவாதத்தின் விளைவு, மகாபாரத போர் ஏற்பட்டு, கவுரவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர் .

கிருஷ்ணர் 5 கிராமங்களை கேட்டார். ஆனால் இந்துக்கள் தங்களின் 3 கடவுள்களின் நம்பிக்கைதொடர்புடைய 3 மையங்களுக்குத்தான் உரிமை கோரினர். இந்த இடங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இது கடவுள்கள் அவதரித்த இடங்கள். துரியோதனன் காட்டியபிடிவாதம் இங்கேயும் காணப்படுகிறது.

இது அரசியல் கலந்த பிடிவாதம். இதை ஓட்டு வங்கியாக்கும் அரசியல் முயற்சி நடக்கிறது. பொதுவான நம்பிக்கை அவமதிக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அயோத்திக்காக பல நூற்றாண்டுகளாக காத்திருந்த காலம் தற்போது முடிந்து விட்டது. சமாஜ்வாதி போன்ற கட்சிகள் ராமர் கோயிலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததுதான் அயோத்தியின் அநீதிக்கு காரணம். அங்கு மக்கள் கடந்த 22-ம் தேதி கொண்டாட்டத்தை பார்த்தனர். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.