அரசியல் புள்ளிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம்: 10 இடங்களில் ஈ.டி., ‘ரெய்டு’

ரூபாய் 50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், சென்னையில் கட்டுமான நிறுவன அதிபர்களின் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை தி.நகரில் உள்ள, ‘லேண்ட்மார்க் ஹவுசிங் பிராஜக்ட்ஸ்’ என்ற கட்டுமான நிறுவன இயக்குனர் உதயகுமார். ‘கே.எல்.பி.பிராஜக்ட்ஸ்’ என்ற கட்டுமான நிறுவன அதிபர்கள் சுனில் கேத்பாலியா, மணீஷ் பர்மர்.

இவர்கள், 2015ல், அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில், ‘பின்னி மில்’ செயல்பட்டு வந்த, 14.16 ஏக்கர் இடத்தை வாங்கினர். அதில், பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டும் பணியை, 2017ல் துவக்கினர். அந்த இடத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் இருந்தன; குறுகலான சாலையும் இருந்தது. இதனால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனப்படும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அனுமதி தர மறுத்தனர். இதனால், அரசியல்வாதிகள், அதிகாரி களுக்கு, 50.86 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளனர்.

கடந்த 2019ல், வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள், உதயகுமார் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்த போது, 50 கோடி ரூபாய் லஞ்ச விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுதொடர்பான, வருமான வரித்துறை விசாரணையில், உதயகுமார் அளித்த வாக்குமூலத்தில், யார் யாருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது என்பதை தெரிவித்தார். அ.தி.மு.க., – எம்.பி.,க்க ளாக இருந்த, பாலகங்கா 23 லட்சம், வெங்கடேசன் 20 லட்சம்; எம்.எல்.ஏ.,வாக இருந்த நீலகண்டன் 40 லட்சம்; தி.மு.க., முக்கிய புள்ளி பி.கே.எஸ்., என்பவருக்கு 10 லட்சம்.

மேயர் அனுப்பியதாக எம்.பி., ஒருவருக்கு 1.67 கோடி; கவுன்சிலர் சரோஜாவுக்கு 2 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்தாக கூறியுள்ளார். இதுதவிர, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு, 9 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் கூறினார். அதன் அடிப்படையில், சமீபத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, உதயகுமார் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், தி.நகர் சரவணா தெருவில் உள்ள உதயகுமார் வீடு, வேப்பேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மணீஷ் பர்மர் வீடு.

ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, எம்.ஜி.எம்., மது ஆலையை சேர்ந்தவரும், உதயகுமார் நண்பருமான அரவிந்த் ஆகியோரின் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை, 6:00 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல, நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள, கே.எல்.பி., நிறுவன இயக்குனர் சுனில் கேத்பாலியாவின் வீடு, சிந்தாரிப்பேட்டையில், அ.தி.மு.க., புள்ளி ஒருவரின் ஆடிட்டர் வீடு உட்பட, 10 இடங்களில் சோதனை நடத்தினர்.