போலீஸ் வேலையிலும், ‘பலே தில்லுமுல்லு’ – போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்

காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக சேர, விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில், 1,000 பேர், போலி சான்றிதழ்கள் கொடுத்து, அரசு வேலை வாங்க, ‘தில்முல்லு’ செய்தது தெரியவந்துள்ளது.

காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில், காலியாக உள்ள, 8,888 இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்களை நிரப்ப, 2019 மார்ச்சில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம்அறிவிப்பு வெளியிட்டது.

47 ஆயிரம் பேர்

இந்த பணிகளுக்கு, ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, ஆகஸ்ட், 25ல் எழுத்து தேர்வு நடந்தது. தேர்வில், 3.25 லட்சம் பேர் பங்கேற்றனர்; 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அவர்களுக்கு உடல் தகுதி மற்றும் உடற்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 8,773 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.மொத்த பணியிடங்களில், 10 சதவீதம், விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் சார்பில், கால்பந்து, கூடைப்பந்து உட்பட, 15 விளையாட்டு போட்டிகளில், ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.அதுவும், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த போட்டிகளில், வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.தற்போது, இந்த விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், இரண்டாம் நிலை காவலர் பணி பெறுவதில் தான், தில்லுமுல்லு நடந்துள்ளது.

சந்தேகம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழும போலீஸ் அதிகாரிகளுக்கு, 1,000 விளையாட்டு வீரர்களின் சான்றிதழ்கள் மீது, சந்தேகம் எழுந்துள்ளது.இதையடுத்து, 1,000 பேரின் சான்றிதழ்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி, அதன் உண்மை தன்மை குறித்து, தகவல் கேட்டனர்.

அந்த சான்றிதழ்கள் போலியானவை என, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுதி செய்துள்ளது.எனவே, போலி சான்றிதழ் கொடுத்த, 1,000 பேரும், எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அவர்களில், 200 பேர், பொதுப்பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் தகுதி பெறுவதற்கான, ‘கட் – ஆப்’ மதிப்பெண் பெற்றும், போலி சான்றிதழ்கள் கொடுத்ததால், தகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, சிறப்பு குழுவை அமைத்து, போலீஸ்அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, ‘குரூப் – 4; குரூப் – 2 ஏ’ தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், காவலர் பணிக்கான தேர்விலும், பலே தில்லுமுல்லு நடந்து இருப்பது, பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

உதவியாளராக சேர்ந்தவர்கள் யார் யார்? ரகசிய கணக்கெடுப்பு துவக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யின், ‘குரூப் – 4 மற்றும் குரூப் – 2 ஏ’ தேர்வுகளில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரணை, தொடர் சங்கிலி போன்று நீள்கிறது.மோசடியில் சிக்கியவரின் உறவினர்கள், பதிவுத்துறை பணியில் இருந்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடந்த விசாரணையில், மேலும் சில நபர்கள் சிக்கினர்.

தற்போதைய நிலவரப்படி, பதிவுத்துறையை சேர்ந்த இரண்டு பேர், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.விசாரணை வளையத்தில் உள்ள மேலும் நான்கு பேர் என, மொத்தம் ஆறு பேர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.இதையடுத்து, ‘குரூப் – 2 ஏ’ தேர்வு முறைகேடு வாயிலாக, உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த, ரகசிய ஆய்வை, பதிவுத்துறை உயரதிகாரிகள் துவக்கி உள்ளனர்.

அவர்களின் முழு விபரங்களும் சேகரிக்கப்படுவதால், பதிவுத்துறையில் சில ஆண்டுகளாக பணியில் சேர்ந்தோர் கலக்கம் அடைந்துள்ளனர்.இது குறித்து, சார் பதிவாளர்கள் கூறியதாவது:பொதுவாக பட்டப்படிப்புமுடித்தவர்கள், உதவியாளர்களாக பணியில் சேருகின்றனர். ‘குரூப் – 2 ஏ’ தேர்வு வாயிலாக, இவர்கள் பணிக்கு வருகின்றனர்.சமீப காலமாக, பொறியியல் பட்டம் முடித்தவர்களும், சட்டம் படித்தவர்களும், உதவியாளர்களாக பணிக்கு வருகின்றனர். முழுநேர சார் பதிவாளர்கள் இல்லாத இடங்களில், இவர்கள் தான் பத்திரப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர்.இவர்களில் பலர், வசூல் மன்னர்களாக உள்ளனர். சட்ட ரீதியாக குறைபாடுகள் உள்ள ஆவணங்களை பதிவு செய்கின்றனர். உயரதிகாரிகள் விசாரித்தாலும், உரிய பதில் அளிக்காமல் குழப்புகின்றனர்.முதல்கட்ட விசாரணையில், தேர்வு மோசடியில், ஆறு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், எத்தனை பேர் பதிவுத்துறையில் பணியில் உள்ளனர் என்பதை கண்டறிய, அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். தற்போது, விசாரணையில் சிக்கியவர்கள், பணிகளின் போது, எந்த மாதிரியான மோசடி செய்துள்ளனர் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சிக்குவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.