மூன்று நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்! நடிகர் விஜய்க்கு வரித்துறை சம்மன்

வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும், மூன்று நாட்களுக்குள் ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி, வருமான வரித்துறை அதிகாரிகள், சம்மன் அனுப்பி உள்ளனர்.

24 மணி நேரம்

மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியன் மீதான, வருமான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்தது.அப்போது, பிகில் பட வசூல் தொடர்பாக, பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, பிகில் படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் சினிமா திரையரங்க அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து, நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடந்தது. தொடர்ந்து, 24 மணி நேரம் நடந்த சோதனையில், விஜய் வீட்டில் இருந்து, ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடந்த சோதனையின் போது, அவர் மறைத்து வைத்திருந்த, 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். கல்பாத்தி அகோரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தும், கணக்கில் காட்டப்படாத, பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்கள் சிக்கினஇது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகர் விஜய் உட்பட மூவருக்கும், வருமான வரித்துறைஅதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மற்றும் மதுரையில் நடந்த வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத, பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கணக்கு விபரங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கின.

சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம்; எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.மூவரும், மூன்று நாட்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கில், நடிகர் விஜய் தன் மீதான குற்றச்சாட்டை, விரைவில் முடிக்க விரும்புவதாக தெரிகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.