‘போலி திராவிட மாடல்’ ஆட்சியாளர்கள் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை: எல்.முருகன் உறுதி

பிரதமர் மோடி தமிழில் பேச ஆரம்பித்தால், ‘போலி திராவிட மாடல்’ ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

இது குறித்து எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் மோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற ‘போலி திராவிட மாடல்’ ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.இந்த உண்மையை, இன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.
இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும் பெரும் தொண்டாற்றி வருகிறார் மோடி . மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன். கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதல்வர் ஸ்டாலின் பார்ப்பதில்லையா?
மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சி.ஆர்.பி.எப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா..?. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதல்வர். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.