பெண் குழந்தைகளை பெருமைப்படுத்துங்கள் ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்

”பொது நலனுக்காக பல்வேறு துறைகளில், பல சாதனைகளை செய்யும் பெண் குழந்தைகளை கவுரவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு, நாடு முழுவதும் ஏற்பாடு செய்ய வேண்டும். பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்று கிழமையில், ‘மன் கி பாத்’ எனப்படும், மனதோடு பேசுகிறேன் என்ற நிகழ்ச்சி மூலமாக, ரேடியோவில், நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். நேற்று அவர், விரைவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவுள்ளது.

இந்த பண்டிகை, நம் வீட்டுக்கு, கடவுள் லட்சுமி தேவியை வரவழைப்பதை குறிக்கிறது. நம் நாட்டு கலசாரத்தில், பெண் குழந்தைகள், லட்சுமி தேவியாக போற்றப்படுகின்றனர். நம் நாட்டின் பெண் குழந்தைகள், பல்வேறு துறைகளில் பொது நலன் சார்ந்து, பல சாதனைகளை படைத்து உள்ளனர். இந்த திறமைவாய்ந்த பெண் குழந்தைகளை பெருமைப் படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நம் மகள்கள், மருமகள்கள், இந்த சமூகத்துக்காக பல பணிகளை செய்து வருகின்றனர்.
சிலர், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருகின்றனர். இன்னும் சிலர், சுகாதாரம், ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டாக்டராக, இன்ஜியராக, வழக்கறிஞராக, நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர். இந்த சமூகம், அவர்களை அடையாளம் பார்த்து, பெருமைப்படுத்த வேண்டும். அதற்காக பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட பெண்களை கவுரவிக்கும் வகையில், ‘பாரத் கி லட்சுமி’ என்ற பெயரில், சமூக வலைதளங்களில், ‘ஹேஷ்டக்’ உருவாக்கி, அவர்களது சாதனைகளை பதிவிடலாம். இதனால், அவர்களது சாதனை, மற்றவர்களுக்கு தெரிய வரும். இந்த பண்டிகை காலத்தில், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு, மற்றவர்கள், இனிப்பு, உடை போன்ற பரிசுகளை வழங்க வேண்டும். நம் வீடுகளில், இது போன்ற பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும்போது, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்.

பண்டிகை என்பது, நம் வீடுகளை மகிழ்ச்சியால் நிரப்பும் நிகழ்ச்சி. ஆனாலும், பலருக்கு அந்த சந்தோஷம் கிடைப்பது இல்லை. சில வீடுகள் வெளிச்சத்தில் இருக்கும்போது, சில வீடுகள் இருளில் இருக்கின்றன. இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதே, மிகச் சிறந்த சந்தோஷம். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், இனிப்பு, உடை போன்றவற்றை, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாம். இவ்வாறு பிரதமர் பேசினார்.