பூமியின் பாதைக்கு திரும்பிய சந்திரயான் -3 உந்து கலன்

,’சந்திரயான் – 3′ விண்கலத்தை நிலவுக்கு ஏந்தி சென்ற உந்துவிசை கலனை, நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து, மீண்டும் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு இஸ்ரோ வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலம் கடந்த ஜூலை 14ல் விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த ஆக., 23ல், பிரஜ்ஞான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டது.

இந்த சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர் மற்றும் ரோவர்’ கருவிகளை ஏந்தி சென்ற, ‘ப்ரொபல்ஷன் மாட்யூல்’ எனப்படும், உந்துவிசை கலன் நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்து கொண்டிருந்தது. அதை பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் வெற்றிகரமாக திசை திருப்பி உள்ளது.

சந்திரயான் – -3 திட்டத்தை செயல்படுத்தும்போதே உந்துவிசை கலனை நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அப்போது நிலவில் தரை இறங்கும் மனிதர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணியின் சோதனை முயற்சியாக இதை செய்து பார்க்க இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதை தற்போது வெற்றிகரமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

அதோடு நிலவில் தரையிறங்கும் விண்கலன்கள், அதன் சுற்றுவட்ட பாதையில் வலம் வரும் ஆய்வுக்கலன்கள் அதன் ஆயுட்காலம் முடிந்தபின் நிலவிலேயே குப்பையாக தேங்கும் நிலை உள்ளது. இது போல நிலவில் குப்பையை சேராமல் தடுக்கவும் இந்த முயற்சி எதிர்காலத்தில் உதவும்.