புண்ணியம் என்றால் என்ன? பாவம் என்றால் என்ன? பரதன் பதில்கள்

இன்றைய அவசர உலகில் தினசரி உட்கார்ந்து ஜபம், தியானம், பூஜை வழிபாடு  என  செய்ய  நேரம்  கிடைக்கவில்லையே?

– கோமல் ரமேஷ், கொரட்டூர்

நேரமில்லை என்று சொல்கிறவன் நேர்மையற்றவன், காலமில்லை என்று சொல்கிறவன் கணக்குத் தெரியாதவன் என்கிறார் சுவாமி சித்பவானந்தர். மனமிருந்தால்  மார்க்கமுண்டு.

புண்ணியம் என்றால் என்ன? பாவம் என்றால் என்ன?

– எஸ். நிரஞ்சனா, செஞ்சிboojai

பிறருக்கு உதவுதல் புண்ணியம். பிறருக்கு துன்பம் தருதல் பாவம்.

மனசு சுத்தமாக இருந்தால் போதும். பூஜை புனஸ்காரம் எதுவும் வேண்டாம் என்கிறார்களே… இது சரியா?

– பார்கவி மதுரை, நாகர்கோவில்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் குரு தோதாபுரி. அவரிடம் இந்த கேள்வியைக் கேட்டதற்கு, ஒரு செப்புப் பாத்திரத்தை தினசரி சுத்தம் செய்தால் மட்டுமே அது பளிச் என்றிருக்கும். சில நாட்கள் சுத்தம் செய்வதை விட்டுவிட்டால் களிம்பு ஏறிவிடும் என்பார். மனதும் அது போன்றதே.

திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் என சட்டம் வருவது பற்றி?

– பி. சுந்தர்ராஜன், நாமக்கல்

திருமணத்திற்கு முன்பு இருவரின் உடல் ஆரோக்கியம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளாமல் திருமணம் செய்தால் பல பிரச்சினைகள் வருகிறது. அதற்காக இந்தச் சட்டம் நல்லதுதான் என்றாலும் ‘போலி சர்டிபிகேட்’ வராது என்பதற்கு என்ன நிச்சயம்? திறமையான ஜோதிடர் மூலம் ஜாதகம் பார்த்தாலே எல்லாம் தெரிந்துவிடும்.

*சர்ச், மசூதி பராமரிப்புக்கு தமிழக முதல்வர் 4 கோடி ஒதுக்கியுள்ளாரே?

– ராம. சேவுகன், கொத்தமங்கலம்

பாழடைந்து போன சர்ச்சையோ மசூதியையோ எங்கும் பார்க்க முடியாது. ஆனால் ஒரு நேரம் பூஜை கூட இல்லாமல் ஏராளமான கோயில்கள் இருக்கிறது. தேர்தலில் முஸ்லிம், கிறிஸ்தவ ஓட்டுக்களுக்காக இந்த அறிவிப்புகள். ஹிந்துக்களுக்கு சாராயம் கொடுத்தாலே போதுமானது என்று கருதுகிறார்களோ… என்னமோ?

* ‘பாவிகளே… மனம் திரும்புங்கள்’ என்ற கிறிஸ்தவர்களின் சுவர் விளம்பரம் பற்றி?

– பே. தமிழினி, மதுரை

ஒரு மனிதனைப் பார்த்து ‘பாவி’ என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை என்கிறார் சுவாமி விவேகானந்தர்.  மனிதன் அடிப்படையில் தெய்வீகம் வாய்ந்தவன்.

காஷ்மீர் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமா?

– ராஜாதிராஜன், கரூர்

போர் என்பது கடைசி ஆயுதமாகத்தான் இருக்கும். ராஜாங்க ரீதியில் எந்த வகையில் பதிலடி கொடுப்பது என்பது முதல் கட்டமாக இருக்கும். ஒன்று மட்டும் நிச்சயம். பிரதமராக இருப்பது மன்மோகன் சிங் இல்லை. நரேந்திர மோடி என்பது பாகிஸ்தானுக்கு நினைவு இருக்கட்டும்.

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.