பிரயாக்ராஜ் கும்பமேளா

காவிரியும் ஒருநாள் கங்கையாகும்

வற்றாத ஜீவநதிகளாக ஓடிக்கொண்டு இருக்கும், கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாதான், முந்தைய அலகாபாத் தற்போதைய பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளா.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கலக்கும் பிரயாக்ராஜின், திரிவேணி சங்கமத்தில் குளிப்பது, எப்போதுமே புண்ணியம் என்பதால், ஆண்டு முழுவதும் பக்தர்கள், இங்கு வந்த வண்ணம் இருப்பர்.

பாற்கடலில் இருந்து பெற்ற அமுத துளிகள் சிந்திய இடமும், அது சிந்திய காலமும் இது என்பதால், இப்போது கும்பமேளாவில் குளிப்பது, சகல பாவங்களையும் போக்கி, மேலும் புண்ணியம் தரும் என்பதால், பலகோடி பேர் இதுவரை நீராடியுள்ளனர். குழந்தைகள், பெரியவர்களென, குடும்பம் குடும்பமாக வரும் மக்கள், நதியை தாயாக வணங்குகின்றனர்; பூத்தூவி, ஆரத்தி எடுத்து, நெகிழ்கின்றனர். அதன்பின்னரே நதியில் இறங்கி குளித்து, ஆனந்தத்தில் திளைக்கின்றனர்.

பாரதத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது உலகெங்கும் வெளிநாடுகளில் எங்கெல்லாம் பாரத வம்சாவளியினர் வசிக்கின்றார்களோ அங்கிருந்தெல்லாம் மக்கள் பெரிய அளவில் இந்த கும்பமேளாவில் கலந்துகொண்டு புண்ணியமடைய வந்துள்ளார்கள். இதைத்தவிர பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உலகின் அதிக மக்கள் கூடுகின்ற அற்புத திருவிழாவை கண்டுகளிப்பதற்காக சுற்றுலா பயணிகளாக வந்தவண்ணம் உள்ளனர்.

உ.பி., மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத், இந்த கும்பமேளா ‘ஒரு சரித்திரம் படைக்கவேண்டும்’ என்ற முடிவோடு, ஓராண்டாக, இதற்கென கடுமையாக உழைத்துள்ளார்; 4,500 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். அவரது உழைப்பு, வீண்போகவில்லை என்பதை, அங்குள்ள ஒவ்வொரு அங்குலமும் நமக்கு புலப்படுகிறது.

மொத்தம், 50 நாள் கடந்த திருவிழாவிற்காக, அலகாபாத் நதிக்கரையில் ஒரு நகரையே உருவாக்கியுளார். சுத்தம், சுகாதாரத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளதால், இத்தனை கோடி பேர் வந்து சென்றபிறகும் திரிவேணி கரையோரம் மிகவும் சுத்தமாக உள்ளது.

ஊரில் உள்ள பாலத்தின் தூண்கள், பொது சுவர்கள் எல்லாம், ராமாயண, மகாபாரத காட்சிகளுடன் வண்ணத்தில் ஜொலிக்கின்றன. விழாவிற்காக, ‘பிராயக்காட்’ என்ற, ஒரு ரயில் நிலையமே உருவாக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு பணியில் போலீசாருடன், ராணுவத்தினரும் கைகோர்த்து உள்ளனர். அலகாபாத்திற்குள் எங்கே இறங்கினாலும், ‘சங்கமத்திற்கு போகவேண்டுமா?’ என, அன்போடு கேட்டு, கைபிடித்து போய் விடாத குறையாக உத்தரபிரதேசத்தின் சுற்றுலா துறையினர் அற்புதமாக வழிகாட்டுகின்றனர்.