சிவப்பாய் சில மண்டுகள்!

பிப்ரவரி மாதம் 14ம் தேதி புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்–எ–முகமது என்ற பயங்கரவாத அமைப்பு தற்கொலை தாக்குதலை நடத்தி, இந்திய வீரர்கள் 44 பேர்களைக் கொன்ற சம்பவத்திற்கு, வருத்தம் தெரிவிக்காதவர்கள்,  பிப்ரவரி 26ந் தேதி இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு, தேசத் துரோகிகளாக மாறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார்கள்.  இவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்கள்.

மே 17 இயக்கத்தைச் சார்ந்த டேனியல் என்ற திருமுருகன் காந்தி, பாகிஸ்தான் தாக்குதல் சம்பந்தமாக பி.பி.சி. என்ன கூறியதோ அதையே வாந்தி எடுத்தது போல் பேசியுள்ளான்.  அதிமேதாவியாக, ஐ.நா.சபையில் கூறி, பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்திருக்க வேண்டும் எனக் கூறியது, காஷ்மீர் பற்றிய முழு உண்மையும் தெரியாமல் பேசுவதாகும். இதற்கு தமிழக ஊடகங்கள் அனாவசிய முக்கியத்துவம் கொடுத்தன.

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காத தமிழகத் தலைவர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வாய் கிழிய கூச்சல் போட்டவர்கள், இரண்டு தமிழக வீரர்கள் கொல்லப்பட்ட போது வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.

கோவையில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ‘தமிழகம் காப்போம்’ என்ற பெயரில் நடத்திய மாநாட்டில், காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று மோசடித் தீர்மானம் போட்டார்கள். ஐம்பதாண்டு காலமாக பேச்சு வார்த்தை நடத்தியதும், சிம்லா உடன்படிக்கையை  அமல்படுத்த வேண்டிய பாகிஸ்தான் ஏன் நடத்தவில்லை என்ற கேள்வியை கேட்காமல் இப்படி ஒரு தீர்மானம்! காரணம் பிரிவினைவாதியின் வீட்டுக் கதவை தட்டிய டி.ராஜாவின் எண்ணத்தின்படியே வந்த தீர்மானமாயிற்றே?

பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நிதி, ஆயுத உதவி, பயிற்சி அளிக்கும் கேவலமான நிலையை தடுக்க ஏன் பாகிஸ்தான் முன்வரவில்லை என்ற கேள்வியை எழுப்பாத காம்ரேடுகள், எந்த வகையில் அரசியல் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்?

கேரள இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், தேர்தல் தேதியை அறிவிக்கும் முன், போர்ச் சூழலை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வருகிறது, இதன் மூலம் தேர்தலை நாசப்படுத்த எண்ணுகிறது, மக்களவைத் தேர்தலில் தனது முடிவை பா.ஜ.க. ஊகித்து விட்டது, இதன் மூலம் அவசர நிலையை அமல்படுத்தி தேர்தலை நிறுத்த முயல்கிறது, என ஓப்பாரி வைத்துள்ளார்.  காஷ்மீர் விவகாரத்தை போராக மாற்ற பா.ஜ.க. முயற்சிக்கிறது,  இதனை பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பைப் பரப்ப பயன்படுத்திக் கொள்கிறது என பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குகிறார். இந்த தேசத் துரோகிகள் எப்பொழுதாவது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் சீனாவைப் பற்றி விமர்சனம் செய்வார்களா? அல்லது சீனாவைத்தான் கேள்வி கேட்பார்களா?