பா.ஜ.,வில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ராஜஸ்தானில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர்.

இதற்கிடையே, விரைவில் லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகி பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த லால் சந்த் கட்டாரியா, ராஜேந்திர யாதவ், முன்னாள் மாநில காங்., தலைவர் சேவா தல் சுரேஷ் சவுத்ரி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரிச்பால் மிர்தா, விஜய்பால் மிர்தா, கிலாடி பைரவா உட்பட பலர் அக்கட்சியில் இருந்து விலகினர்.

இவர்கள் அனைவரும், பா.ஜ., மாநில தலைவர் சி.பி.ஜோஷி, மாநில முதல்வர் பஜன்லால் சர்மா முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தனர். இதில் லால் சந்த் கட்டாரியா, மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இதேபோல் ஜாட் சமூகத்தினரின் ஆதரவை பெற்ற மிர்தா குடும்பத்தினர் பலர் பா.ஜ.,வில் இணைந்துள்ளதால், இச்சமூகத்தின் ஓட்டுகள் பெருமளவில் பா.ஜ.,விற்கு சாதகமாக விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியானா மாநிலத்தில் ஹிசார் லோக்சபா தொகுதியின் பா.ஜ., – எம்.பி.,யாக உள்ள பிரிஜேந்திர சிங், அக்கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்தார்.
பா.ஜ., மூத்த தலைவர் பிரேந்தர் சிங்கின் மகனான இவர், ‘அரசியல் அழுத்தங்கள் காரணமாக பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்; எனக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என, சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.