பா.ஜ., மீது தமிழக மக்கள் நம்பிக்கை : மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதி

”தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காண முடிகிறது. அங்குள்ள மக்கள் தங்களது மிகப்பெரிய நம்பிக்கையாக பா.ஜ.,வை பார்க்கின்றனர். இம்முறை தமிழகத்தில் மாற்று சக்தியாக, பா.ஜ., உருவெடுக்கும்,” என, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:

இந்த லோக்சபா தேர்தல் முடிவில், 400 இடங்களை பா.ஜ., கைப்பற்றும். அதே நேரத்தில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெறுவதற்கே போராட வேண்டியிருக்கும்.

இப்போது ஓட்டுச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டுமென்கிறது காங்கிரஸ்.கடந்த காலங்களில் ஓட்டுச்சாவடிகள் சர்வசாதாரணமாக சூறையாடப்படும். அதனால் தான் ஓட்டுச்சீட்டு முறையை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அப்போதெல்லாம் ஓட்டுச்சீட்டுகள் கைமாற்றப்பட்டு, கள்ள ஓட்டுகள் போடப்படும். ஆனால், இன்று ஓட்டுப்பதிவு இயந்திரம் வெளிப்படைத்தன்மையுடன் திகழ்கிறது.

மத்தியில் எந்த அரசு உள்ளது என்பதை பற்றி கவலையில்லை. தேர்தல் ஆணையம் மிகப்பெரிய கடமையை செய்கிறது. இது தான், இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம். ராகுலும், அகிலேஷும் சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல இணைந்து வந்தனர். ஐ.மு., கூட்டணி என்ற பெயரில் அப்போது வந்தனர். இப்போதோ இண்டியா கூட்டணி என்ற பெயரில் வருகின்றனர். மற்றபடி பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. இவர்கள் ஊழல்வாதிகள். மக்கள் மன்றத்தில் ஏற்கனவே தோற்றுப்போனவர்கள். எந்தனை முறை தங்களை மார்க்கெட்டிங் செய்தாலும், இவர்கள் இருவரும் தேறப்போவதில்லை.

தமிழகத்தில் இந்த முறை மிகப் பெரிய மாற்றத்தை காண முடியும். தமிழக மக்கள், தங்களுக்கான மிகப்பெரிய நம்பிக்கை ஒளிக் கீற்றாக பா.ஜ.,வை பார்க்கத் துவங்கிவிட்டனர். இதுவரையில் இல்லாத அளவுக்கு மாற்று சக்தியாக பா.ஜ., அங்கு உருவெடுத்துள்ளது. எனவே, இந்த முறை தமிழகத்தில் வரலாற்று சாதனை அளவிலான ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.