பா.ஜ.க. கூட்டணி இலக்கு: 400க்கும் மேலே நாலு திசையும் நமதே!

ஆட்சி அதிகாரத்தில் வலுவாக அமர்ந்திருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்கள் நலத்திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திய திருப்தியுடன் மக்கள் மீதான நம்பிக்கையுடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது.

2014 தேர்தலின்போது அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் நிலைகுலைந்து போயிருந்தது. தினசரி வெளிப்பட்ட ஊழல் களால் நற்பெயர் இழந்த மன்மோகன் சிங் அரசு, தேர்தலுக்கு முன்னதாகவே சூறாவளி
யாகத் தாக்கிய நரேந்திர மோடியிடம் களத்தை ஒப்படைத்திருந்தது. அதுபோலவே, மோடி அலையில் பாஜக தனிப்பெரும் கட்சியாகவே அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனித்த பெரும்பான்மை யுடன் அமைந்த ஆட்சி அது.

கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் வரிச் சீர்திருத்தம், மக்கள் நலத்திட்டங்கள், உள் கட்டமைப்பு மேம்பாடு, வெளிப்படையான நிர்வாகம், போன்ற சிறந்த செயல்பாடுகளால் மக்களின் ஆதரவை மேலும் பெருக்கி இருக்கிறது பாஜக.

இம்முறை இலக்கு 400 என்ற லட்சியத்துடன், தன்னம்பிக்கையுடன் களம் காண்கிறது பாஜக. எதிர்த்தரப்பிலோ பாஜகவின் எதிரிகளாக தம்மை வளர்த்துக் கொள்ளும் மாநிலக் கட்சிகளிலோ, காங்கிரஸிலோ, இடதுசாரிகளிலோ, யாருக்கும் துளியும் நம்பிக்கையில்லை. அதன் வெளிப்பாடே அவர்கள் மோடிக்கு எதிராக கக்கும் விஷம். அந்த வெறுப்பு உமிழும் கொடிய பிரச்சாரத்தையும் தமக்கு சாதகம் ஆக்கிக்கொள்ளும் பிரதமர் மோடியைக் கண்டு விக்கித்துத் திகைக்கிறது எதிர் அணி.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக கூட்டணி அரசால் நிலையாக நாட்டை ஆள முடியும் என்று நிரூபித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1998ல் அவர் அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 13 கட்சிகள் அங்கம் வகித்தன. அதுவே 1999ல் 20 கட்சிகளைக் கொண்ட கூட்டணியாகப் பெருகியது.

2004ல் 12 கட்சிகளும், 2009ல் 13 கட்சிகளும் தே.ஜ. கூட்டணியில் இணைந்திருந்தன. ஆயினும் காங்கிரஸ் நடத்திய அரசியல் பேரக் கூட்டணிகளால் 10 ஆண்டு நாடு பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில்தான் குஜராத் முதல்வராக இருந்த மோடியை முன்னிறுத்தி, 29 கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014ல் வலுவாக அமைக்கப்பட்டது. மோடியின் தீவிர பிரசாரத் தால் நாடு மாற்றம் கண்டது. மீண்டும் பாஜக அரியணை ஏறியது. அந்தத் தேர்தலில் பாஜக மட்டுமே 282 தொகுதிகளில் வென்றது. அதன் கூட்டணிக் கட்சிகள் 54 தொகுதிகளில் வென்றன. (மொத்தம்: 336)

இந்தப் பழைய கதையை நினைவுபடுத்தக் காரணம் இருக்கிறது. 2014ல் நடந்த தேர்தல், ஊழல் கறை படிந்த காங்கிரஸ் அரசுக்கு எதிரான யுத்தமாக இருந்தது. 2019ல் நடைபெறவுள்ள தேர்தலோ கடந்த ஐந்தாண்டுக் கால நல்லாட்சியைத் தக்க வைப்பதற்கான போராட்டக் களம்.

கடந்த ஐந்தாண்டுகளாக அதிகாரம் இழந்ததால் பலவீனப்பட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் வாழ்வை மீட்டாக வேண்டிய கட்டாயத்தால் பரிதவிக்கிறார்கள். பாஜகவோ, நல்லாட்சி நடத்தியதன் பெருமிதத்துடன், மோடி என்ற நிகரற்ற தலைமையுடன் தேர்தலை அணுகுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒரே மேடையில் கூடிக் குலாவின. காங்கிரஸ் இளவரசர் ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக இளவரசர் ஸ்டாலின் முன்மொழிந்த மன்னராட்சி நிகழ்வும் நடைபெற்றது. அவர்களது துரதிர்ஷ்டம் என்ன வென்றால் தற்போதைய யுகம் மக்களாட்சி யுகம் என்பதாகும். இங்கு மக்களின் மனங்களை வெல்பவரே மன்னராக முடியும் – மோடியைப் போல.

அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் மூன்றில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி அதன்மூலம் மீண்டுவிட்டதாக அதன் நண்பர்கள் புளகாங்கிதம் அடைந்தனர். உண்மை என்னவென்றால் அங்கு மாநில அரசுகள் மீதான அதிருப்தியே பாஜகவின் சரிவுக்குக் காரணமானது. காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் ஜாதி ரீதியிலான அணிதிரட்டல்களும் தற்காலிகமாக பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது உண்மையே. ஆனால், புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசுகள் மிகக் குறுகிய காலத்தில் ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தானில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளன.

தவிர, மக்களவைத் தேர்தலுக்கும் சட்டசபைத் தேர்தலுக்குமான வேறுபாட்டை மக்கள் உணர்ந்திருப்பது, இம்மூன்று மாநிலங்களிலும் பாஜகவின் செல்வாக்கு பெருகி வருவதில் தெளிவாகத் தெரிகிறது.

கூட்டணிக் கட்சிகள் விஷயத்திலும் பாஜக வலுக்கூடி இருக்கிறது. 2014 தேர்தலில் 29 ஆக இருந்த நட்புக் கட்சிகளின் எண்ணிக்கை தற்போது 40 ஆக அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் அடம் பிடித்து வந்த சிவசேனை கூட தற்போது நிதர்சனத்தை உணர்ந்து கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளமும், தமிழகத்தில் அதிமுகவும், அஸ்ஸாமில் அசாம் கண பரிஷத்தும் பாஜக கூட்ட ணியை மேலும் வலுவாக்கி இருக்கின்றன. மேற்கு வங்கத் தில் கூர்க்கா விடுதலை முன்னணியும், ஜம்மு காஷ்மீரில் பி.டி.பி.யும் பிகாரில் ஆர்.எல்.எஸ்.பி.யும், ஆந்திரத்தில் தெலுங்குதேசமும் கூட்ட ணியில் இருந்து விலகி இருக்கின்றன. இவற்றால் பாஜகவுக்கு சாதகமே தவிர பாதகமில்லை. தவிர தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்., ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் சேர்வதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

தற்போது பாஜக அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், ஹரியானா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், மணிப்பூர், திரிபுரா, உத்தராகண்ட், உ.பி. ஆகிய 9 மாநிலங்களிலும் மகாராஷ்டிரா, கோவாவில்  கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தும் ஆட்சியில் உள்ளது. தவிர, பிகார், தமிழ்நாடு, நாகலாந்து மேகாலயா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் பாஜகவின் தோழமைக் கட்சிகள் ஆள்கின்றன.

இவற்றில் (16 மாநிலங்கள்) உ.பி. தவிர்த்து இதர மாநிலங்களில் 2019 தேர்தலில் 90 சதவீத வெற்றியை பாஜக உறுதி செய்யும். உ.பி.யில் பாஜகவே அதிக தொகுதிகளில் வெல்லும்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், கர்நாடகா, ம.பி., சத்தீஸ்கர், பஞ்சாப், புதுச்சேரி, ஆம் ஆத்மி கட்சி ஆளும் டில்லி, ஜனாதிபதி ஆட்சியிலுள்ள ஜம்மு – காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களிலும் பாஜக 70 சதவீத வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ஆந்திரபிரதேசம், கேரளா, தெலுங்கானா ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலக் கட்சிகள் ஆளும் 6 மாநிலங்கள் மட்டுமே பாஜகவுக்கு சவாலாக விளங்கக் கூடியவை. இம்மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 127. இவற்றில் சென்ற தேர்தலில் தே.ஜ. கூட்டணி வென்ற இடங்கள் 22 அதில் தெலுங்கு தேசத்தின் 15 இடங்களைக் கழித்துவிட்டால் 7 இடங்களில் பாஜக வென்றுள்ளது. இம்முறை இந்த எண்ணிக்கை, இந்த 6 மாநிலங்களிலும் சேர்த்து 40ஐத் தாண்டும்.

உ.பி.யிலும், ம.பி., ராஜஸ் தான், சத்தீஸ்கரிலும் ஏற்படும் சிறு இழப்புகளை இந்த வெற்றி ஈடுகட்டும், தவிர பிகார், தமிழக மாநிலங்கள் இம்முறை 100 சதவீத வெற்றியை அளித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி எல்லையாக 400ஐப் பதிவு செய்யும்.

தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஒரு மாதம் உள்ள சூழலில் மோடி ஏற்கனவே ஒரு சுற்று பிரசாரம் செய்து முடித்துவிட்டார். மாறாக எதிர்க்கட்சிகள் தகுந்த தலைமையும் முறையான திட்டமும் இன்றித் தள்ளாடுகின்றன. அண்டை நாடான பாகிஸ்தான் மேற்கொள்ளும் போர் ஆயத்தங்களும் மோடிக்கே சாதகமாகின்றன.