பொள்ளாச்சிகளுக்காக பதுங்கியிருக்கும் பயங்கரங்கள்

உங்கள் நாட்டின் பண்பாட்டிற்கும், எங்கள் நாட்டின் பண்பாட்டிற்கும் ஒரு சிறு வித்தியாசமே உள்ளது. உங்கள் நாட்டின் ஆண்கள் தன்னை பெற்ற தாயைத் தவிர மற்ற எல்லா பெண்களையும் மனைவிகளாகப் பார்க்கின்றார்கள். ஆனால் எங்கள் நாட்டில் ஆண்கள் தனது மனைவியைத் தவிர மற்ற எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்க்கின்றனர். இது நமது அணுகுமுறையிலேயே அடிப்படையான மாற்றத்தை உண்டு பண்ணுகிறது என்று சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய நாட்டில் ஆற்றிய உரை ஒன்றில் கூறினார்.

பெண்களைத் தெய்வமாக போற்றி வணங்கிய பாரதத்தில்… தமிழகத்தில்… பொள்ளாச்சி போன்ற சம்பவங்களுக்கு யார் காரணம்-? இது பற்றி பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஆழ்ந்த அர்த்தமுள்ளது. பெற்றோர் அன்பும் அரவணைப்பும் பெண் குழந்தைகளுக்கு கிடைக்காதது தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தின் பண்பாட்டு வீழ்ச்சிக்கு கீழ்க்கண்டவர்களும் காரணம் :

  • தரம் தாழ்ந்த தொலைக்காட்சி சீரியல் ஒளிபரப்புகிறவர்கள்.
  •  தரம் தாழ்ந்த திரைப்படங்கள் தயாரிப்பவர்கள்.
  • கல்விக் கூடங்களில் நீதி போதனை இல்லாமல் போகச் செய்துவிட்டவர்கள்.
  • நல்ல பண்புகளை ஊட்டாத பெற்றோர்.
  • அளவுக்கு அதிகமாக செல்போனுக்கு அடிமையானவர்கள்.

பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள், வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். அநியாயத்தை எதிர்பபது நல்லதுதான். ஆனால் இதைக் காரணம் காட்டி நக்ஸலைட்டு குழுக்கள், போலீஸ் துறையாலும், காவல் துறையாலும் தீர்வு வராது…. போராட்டங்களின் வாயிலாகத்தான் தீர்வு கிடைக்கும் என்று துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு தமிழகம் தழுவிய பெரிய போராட்டங்கள் நடத்த திட்டம் தீட்டுகின்றன.
இது தேர்வு நேரம், தேர்தல் நேரம். சமூக விரோதிகள் கிளர்ச்சியை ஊதிப் பெரிதாக்க திட்டமிடுகின்றனர். தமிழக அரசும், காவல்துறையும் இவர்களின் சதித்திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.