பாரத இங்கிலாந்து நிதிச் சந்தை உரையாடல்

பாரதமும் இங்கிலாந்தும் கிரிப்டோ கரன்சிகள், கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான சர்வதேச முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்ததுடன், அதனுடன் இணைந்த அபாயங்களைச் சமாளிக்க வலுவான உலகளாவிய அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. பாரதம் மற்றும் இங்கிலாந்தின் 2வது நிதிச் சந்தை உரையாடலில் இரு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் அந்தந்த வங்கித் துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள், வங்கிப் போக்குகள் மற்றும் இத்துறையில் உருவாகி வரும் பாதிப்புகள் மற்றும் அபாயங்கள் பற்றிய விஷயங்களை பரிமாறிக்கொண்டனர். பரஸ்பர கற்றல் மூலம் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) பற்றிய அறிவை அதிகரிப்பதற்கான நோக்கம், கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான சர்வதேச முன்னேற்றங்கள், வலுவான உலகளாவிய அணுகுமுறைகளின் முக்கியத்துவம், ஆழமான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஆதரவாக சொத்து மேலாண்மைத் தொழில்களைப் பயன்படுத்துவதற்கான நோக்கம் போன்றவை இதில் ஆராயப்பட்டது. மேலும், அந்தந்த நாடுகளில் உள்ள ஓய்வூதிய நிதிகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், அதில் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சமூக பங்குச் சந்தைக்கான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளர்ச்சி உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான வளர்ந்து வரும் பகுதிகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இரு தரப்பும் ஜூன் மாதம் அரசாங்கம் தலைமையிலான நிலையான நிதி மன்றத்துடன் இந்த பகுதிகளில் இருதரப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் அதைத் தொடர்ந்து ஆண்டின் பிற்பகுதியில் அமைச்சர்கள் மட்டத்திலான பொருளாதார மற்றும் நிதி உரையாடல் நடத்தவும் 2024ல் பாரதத்தில் அடுத்த நிதிச் சந்தை உரையாடலை நடத்தவும் ஒப்புக்கொண்டன.