இன்று பாரதியாரின் 138-வது பிறந்தநாள் – பாரதி இதழியல் இமயம்

எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று (11-12-2019) கொண்டாடப்படுகிறது.

பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் போராளியான மகாகவி பாரதியார், கடந்த 1882ம் ஆண்டு இதே நன்னாளில்தான், எட்டயபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி சுப்ரமணிய ஐயர்- இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

தன் வாழ்நாள் முழுவதும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக, எழுத்துகளால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக, பாரதியார் திகழ்ந்தார்.

இன்று பத்திரிகைப் பணி மிகுந்த கெளரவம் பெற்றதாக உள்ளது. திறமை இல்லாதவர்களும்கூட பொருளீட்ட எளிய துறையாக பத்திரிகைத் துறை விளங்குகிறது. ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன் நிலைமை இப்படியில்லை. இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று கூறத்தக்க வகையில் ஆங்கிலேயரின் கெடுபிடி ஆட்சி நடந்து வந்தது. அவர்களுக்கு ஜால்ரா தட்டுபவர்களே பத்திரிகை நடத்த முடியும். ஆங்கிலேய ஆட்சியை சாடும் பத்திரிகைகள் மீது ராஜதுவேஷ வழக்குகள் தொடரப்பட்டு முடக்கப்பட்டன. இந்த கொடிய சூழலில்தான் தமிழகத்தில் பாரதி ஓர் ‘இதழியல் யாகம்’ நடத்தினார்.

1904ல் பாரதியின் யாகம் துவங்கியது. 1921 செப்டம்பரில் அவர் மறையும் வரை இந்த யாகம் அர்ப்பணமயமான அத்தியாயங்களுடன் நடந்தது. இந்த 17 ஆண்டுகளில் அவர் அடைந்த ஏமாற்றங்கள், எள்ளல்கள், துயரங்கள், சோகங்கள், எத்தனையோ. எதனையும் பொருட்படுத்தாமல் இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்காக தன்னுயிரை மையாக்கி அவர் எழுதிய கட்டுரைகளும் கவிதைகளும் தான் அன்னை தமிழுக்கு இன்று அழகு சேர்த்துள்ளன.

பொழுதுபோகாத போக்கற்றவர்கள் பண்பலை வானொலியில் ஒலிபரப்பப்படும் திரையிசைப் பாடல்களை தம் நண்பர்களுக்கு டெடிகேட் செய்வது போன்றதல்ல இது. தன் வாழ்வை உருக்கி பாரதி வார்த்தெடுத்த எழுத்துக்களில் தான்  இன்றைய தமிழ்மொழி பதிப்பிக்கப்படுகிறது.

இன்றைய பொதுஜன ஊடகங்களின் பகாசுரப்பசிக்கு ஒரே மருந்து பாரதி மட்டுமே. இந்த மருந்து பின் விளைவுகளற்றது. ஆனால் கசப்பாகவே இருக்கும். பாரதி எனும் அமுதம் நமக்குக் கசப்பாகத் தோன்றினால் குற்றவாளி பாரதி அல்ல.

பாரதி பத்திரிகையுலகில் நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவற்றுள் சிலவற்றை இங்கு நினைவு கூர்வதால் நமது நேரம் வீணாகி விடாது. வீரப்பன் கதைகளையும், ஜெயலட்சுமி கதைகளையும் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.

* தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி. இந்தியா (1905) பத்திரிகைக்கே அந்தப் பெருமை சேரும்.

* பத்திரிகை சந்தாவில் புதுமையை அறிமுகப்படுத்தியவர் பாரதி. வாசகர்களின் வருமானத்துக்கு ஏற்றவாறு சந்தா விகிதம் நிர்ணயித்த பாரதியை இன்றும்கூட யாரும் எட்ட முடியாது.

பத்திரிகையுடன் இலவச இணைப்பாக சிறு புத்தகம் வழங்குவதை அறிமுகப்படுத்தியவர் பாரதி.

* ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் பணி புரிந்தவர் பாரதி. அவர் பணியாற்றிய சில பத்திரிகைகள், சுதேச மித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதம் அல்லது யங் இந்தியா, விஜயா, சூர்யோதயம், கர்மயோகி, தர்மம்.

* பத்திரிகைகளில் நேரடியாக பணிபுரிந்தது மட்டுமின்றி சுதந்திர இதழாளராகவும் பல பத்திரிகைகளுக்கு தம் படைப்புகளை அனுப்பியிருக்கிறார் பாரதி. விவேகபானு, சர்வஜன மித்திரன், ஞானபானு, காமன்வீல், நியூ இண்டியா ஆகிய பத்திரிகைகளிலும் பாரதியின் எழுத்துக்கள் அணி செய்துள்ளன. புனை பெயர்களை (காளிதாஸன், ஷெல்லிதாஸ், சாவித்திரி, நித்யதீரர், உத்தம தேசாபிமாளி) அதிகம் பயன்படுத்தி
யவரும் பாரதியே.

*செய்திப் பத்திரிகையில் வாசகரின் ஆர்வத்தைக் கூட்ட கதை, கவிதைகளை வெளியிட்டவர் பாரதி. வாசகர்களை விவாதத்திலும் பங்கேற்கச் செய்தவர் பாரதி.

*பத்திரிகைகளின் அங்குசம் வாசகர் கடிதமே. இதனை உணர்ந்து பல வாசகர் கடிதங்களை எழுதிய பத்திரிகையாளர் பாரதி. தி ஹிந்து நாளிதழில் அன்றே வாசகர் கடிதங்களை எழுதியிருக்கிறார் பாரதி.

* முதன்முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு மாதம் குறித்தவர் (இந்தியா, விஜயா பாரதியே. விஜயா இதழில் தமிழ் எண்களையும் பயன்படுத்தி புரட்சி செய்தவர் பாரதி.

*பழைய பத்திரிகைகளில் வெளிவந்த விஷயங்களை எடுத்துக் கோர்த்தால் நல்ல வசனநூல் கட்டலாம் என்று பத்திரிகை உலகுக்கு வழிகாட்டியவர் பாரதி. எங்கள் காங்கிரஸ் யாத்திரை போன்ற சிறுநூல்களை தனது பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியிட்டவர் பாரதி.

* செய்தி அனுப்புவோருக்கு பணம் தரும் முறையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியவர் பாரதி.

* இந்தியா பத்திரிகையில் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்ற பகுதியை வெளியிட்டு மொழிகளிடையே இணக்கம் கண்டவர் பாரதி.

*சித்திரங்களை மட்டுமே கொண்ட சித்ராவளி என்ற பத்திரிகையை நடத்தத் திட்டமிட்டவர் பாரதி.

*லண்டன் டைம்ஸ் முதல் கொல்கத்தாவின் அமிர்தபஜார் பத்ரிகா வரை 50க்கும் மேற்பட்ட பிறமொழி பத்திரிகைகள் பற்றியும், பிறமொழி பத்திரிகையாசிரியர்கள் பற்றியும் தனது பத்திரிகையில் செய்தி வெளியிட்டவர் பாரதி.

நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தச் சாதனைகளை பாரதி நிகழ்த்தியிருக்கிறார். இன்றைய நவீன பத்திரிகையுலகம் நினைத்தும் பார்க்காத பல முகடுகளை அவர் தொட்டிருக்கிறார். பாரதியே நமது பத்திரிகையுலகின் பிதாமகர்.

மகாத்மா காந்தி இந்தியாவில் அறியப்படுவதற்கு முன்னரே 1909ல் காந்திபசு என்ற கருத்துப் படத்தை இந்தியாவில் வெளியிட்டவர் பாரதி.

தமிழுக்கு பொதுவுடைமை என்ற புதிய சொல்லை வழங்கியதோடு, வன்முறை மூலம் உருவாக்கப்படும் ரஷ்யாவின் சோஷலிஸ சமுதாயம் நிலைக்காது என்று 1920லேயே தீர்க்க தரிசனமாக எழுதியவர்  பாரதி.

நாட்டின் முந்நாட் பெருமையும், இந்நாட் சிறுமையும், எதிர்கால வளமையும் கருதாக் கல்வியால் பலனில்லை என்று கூறி சுதேசிக்கல்வியை வலியுறுத்தியவர் பாரதி.

ஹிந்து ஜனத்தொகை குறைவதன் அபாயத்தையும், தீண்டாமை அரக்கனின் கொடிய விளைவையும் தயவு தாட்சண்யமின்றி சுட்டிக் காட்டியவர் பாரதி. மகளிரின் விடுதலைக்காக தமிழ் பத்திரிகையில் குரல்கொடுத்து பாலின சமத்துவத்துக்கு தமிழ்நாட்டில் வித்திட்ட ஆடவர் திலகம் பாரதி.

தமிழின் பழம்பெருமையை பேசியபடியே ஆங்கில மோகத்தில் வீழ்வதால் அன்னை  தமிழ் அவலத்தில் தாழும் நிலையை எடுத்துக்கூறி அன்றே எச்சரித்தவர் பாரதி. அதேசமயம் கிணற்றுத் தவளையாக இல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளையும் அறிந்து அதனை தனது இதழியல் பணிக்கு பயன்படுத்தியவர் பாரதி.

உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலே தெளிவுண்டாகும் என்ற தனது அமுதமொழிக்கு தானே உதாரணமாக பாரதி வாழ்ந்ததை மேற்கண்ட தீர்க்க தரிசனங்கள் காட்டுகின்றன.

கட்டற்றுத் திரியும் காளை கள்ளையும் அருந்தியதுபோல கண்டதையும் எழுதி சில்லறை பார்க்கும் சுயநல அற்பர்களை ஓரம்கட்ட யுவபாரதிகள் தயாராகட்டும். எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம் என்ற மகாகவி பாரதியின் வைர வரிகளை அனைவர் நெஞ்சிலும் பதிக்க இந்த ஆண்டு ஓர் அற்புதத் தருணம்.

கடைசியாக மீண்டும் சிறிது பாரதி அமுதம் : இந்தியா 07.11.1908 இதழில் பாரதி எழுதிய விஞ்ஞாபனம் இன்றும் பொருத்தமானது. இதோ அந்த பிரகடனம்…

“இந்தியா பத்திரிகை ஒருவருடைய சொந்த லாபத்தின் பொருட்டாக ஏற்பட்டதன்று. ஒருவனுடைய பொழதுபோக்கேனும், ஜீவனமேனும் நோக்கமாகக் கொண்டும் இப்பத்திரிகையை நாம் ஆரம்பிக்கவில்லை. தேச சேவையே இப்பத்திரிகையின் நோக்கம். தேச அபிவிருத்தியே நமது அபீஷ்டம். தேச ஜனங்களுக்கே நமது பத்திரிகையை நிவேதனம் செய்திருக்கிறோம்…

‘‘இப்பத்திரிகை தமிழ்நாட்டு பொதுஜனங்களுக்குச் சொந்தமானது. யாரேனும் ஒரு தனிமனிதனுடைய உடைமையன்று. இதைத் தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி, இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் அவர்கள் நன்மையின் பொருட்டு செலவிடப்பட்டு வருகிறது. நமக்கு இது விஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி உடைமைக்குள்ள உரிமை கிடையாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனது பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய பத்திரிகையாளர்களில் பாரதியார் முதன்மையானவர். இந்திய பத்திரிகை உலகில் கார்ட்டூனை முதலில் அறிமுகம் செய்தவர். சமூக நலனுக்காகப் பாடுபட விரும்பும் இன்றைய பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் முன்னோடியான அவரின் பங்களிப்பை வணங்கி போற்றுவோம்.