தெற்காசிய விளையாட்டு போட்டி -கடைசி நாளிலும் தங்கவேட்டை இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்ட் மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

பதக்கவேட்டையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. நாள்தோறும் இந்தியர்கள் பதக்க அறுவடை நடத்தினர். இதே நிலைமை கடைசி நாளான நேற்றும் காணப்பட்டது.

நேற்றைய தினம் இந்தியா 10 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்கள் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி (51 கிலோ உடல் எடைப்பிரிவு) நேபாளத்தின் ராய் மலாவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய முன்னணி வீரர் விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ) பாகிஸ்தானின் குல் ஜாயிப்பை 5-0 என்ற கணக்கில் சாய்த்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். சோனியா லாதர் (57 கிலோ), மஞ்சு பாம்ப்போரியா (64 கிலோ), ஸ்பார்ஷ் குமார் (61 கிலோ), நரேந்திரா (91 கிலோ) ஆகிய இந்தியர்களும் குத்துச்சண்டையில் தங்கமாய் ஜொலித்தனர்.

ஸ்குவாஷ் பந்தயத்தில் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. ஆண்கள் பிரிவில் அதே பாகிஸ்தானுக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 101-62 என்ற புள்ளி கணக்கில் இலங்கையையும், பெண்கள் பிரிவில் 127-46 என்ற புள்ளி கணக்கில் நேபாளத்தையும் துவம்சம் செய்து இந்தியா இரட்டை தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதே போல் ஜூடோ கலப்பு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

10 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழா நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக நேபாள துணை பிரதமர் ஈஸ்வர் பொக்ரால் கலந்து கொண்டார்.

பதக்கப்பட்டியலில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என்று மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் இது தான். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 309 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது. இந்த விளையாட்டு தொடங்கிய 1984-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து வருவது நினைவு கூரத்தக்கது.

நடப்பு தொடரில் நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலம் என்று 206 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் என்று 251 பதக்கத்துடன் 3-வது இடத்தையும், பாகிஸ்தான் 131 பதக்கத்துடன் (31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலம்) 4-வது இடத்தையும் பிடித்தன.