பாரதம் யார் பக்கம்?

உக்ரைன் ரஷ்யா போர் துவங்கி 300 நாட்களை எட்டவுள்ளது.இந்த போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்குவதுடன் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் உக்ரைன் ரஷ்ய போரில் பாரதம் யார் பக்கம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “இந்த போரில் மத்திய அரசு பாரத மக்களின் நலன் சார்ந்த பக்கத்தை எடுத்துள்ளது. போரின் தாக்கம் உணவு, எரிபொருள், உரத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நிறைய நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த போர் வளர்ந்து வரும் நாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் இன்று பாரதமும், பிரதமர் மோடியும் உலகின் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் குரலாக உருவெடுத்துள்ளனர்” என கூறினார். மேலும், பாரதத்தின் தலைமையில் உக்ரைன் ரஷ்யா இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுமா?என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் இந்த கேள்விக்குபதிலளிப்பது கடினம்’ என தெரிவித்தார்.

பாரதம் பாகிஸ்தான் இடையே உள்ள உறவை கிரிக்கெட் மாற்றுமா, இரு நாடுகளையும் சமமாக உற்சாகப்படுத்தும் விளையாட்டான கிரிக்கெட்டுக்கு விதிவிலக்கு அளிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கிரிக்கெட்டில் எங்களின் நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும்.பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உரிமை ஒரு நாட்டிற்கு உண்டு என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.இதை நாங்கள் சட்டப்பூர்வமாக்காவிட்டால், அது தொடரும்.எனவே, பாகிஸ்தான் மீது உலக அளவில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுக்காவிட்டால் இந்த அழுத்தம் வெளிவராது.இதில் நமது ரத்தம் சிந்தப்பட்டதால் பாரதம் அதன் வழியில் இதனை வழி நடத்த வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பேசிய ஜெய்சங்கர், “உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் தலை மீது துப்பாக்கியை வைத்தால் நீங்கள் அவருடன் பேசுவீர்களா? பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து அவர்களை எப்படி வெளியே கொண்டுவருவது என்பதுதான் எங்களது நோக்கம்.இரு நாட்டு எல்லையில் இது ஒரு விதிவிலக்கான சூழல்.ஆனால் அவர்கள் பயங்கரவாதப் பாதையை விட்டுச் செல்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறினார்.