பாதிரியின் தமிழ்ப்பற்று பகல்வேஷம் அம்பலம்!

அன்புடையீர் வணக்கம்.

சமீபத்தில் ஒரு ஆன்மிகக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் பேசிய ஒருவர் பாதிரி ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை பெருமைபட விவரித்தார். ஜி.யு. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவார். அப்படி எவருக்கோ கடிதம் எழுதும்போது துவக்கத்தில் வழக்கம்போல் ஒரு திருவாசகப் பாடலை எழுதினார். அப்படி எழுதும்போது உள்ளம் உருகி பக்தி மேலிட்டு அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருகி கடிதத்தில் வடிந்தது என்றும் அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அனுப்பினார் என்றும் போப்பின் திருவாசக பக்தியை விவரித்தார். கூட்டம் முடிந்தவுடன் அவரிடம், ஐயா, நீங்கள் போப் பற்றி குறிப்பிட்ட சம்பவத்திற்கு சான்று ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டதற்கு தாமும் இதுபோல ஒரு கூட்டத்தில் ஒருவர் பேசியதில் இருந்துதான் தெரிந்து கொண்டேன் என்றார். யாரோ இட்டுக் கட்டிய கட்டுக் கதையை நம்மவர்கள் தொடர்ந்து பரப்பி வருவது வெட்கக்கேடானது.

போப் பற்றி இன்னொரு பொய்யையும் சிலர் பரப்பி வருகின்றனர். போப் தனது கல்லறையில் இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதச் சொன்னதாகவும் அது இப்போதும் இருப்பதாகவும் சிலர் பேசி வருகின்றனர். லண்டன் சென்ற சில தமிழ் ஆர்வலர்கள் அவரது கல்லறையைத் தேடிச் சென்று பார்த்தபோது அதில் சிலுவையும் பைபிள் வாசகங்களும் தான் இருந்தது என்று குறிப்பிடுகின்றனர்.