திருமா கட்சி ஹிந்துக்களே, உஷார்!

திருமாவளவன் சென்னையில் 2016 டிசம்பர் 20 அன்று ‘கிறிஸ்து பிறப்பு பெருவிழா 2016’ என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். அதில் சிறப்பு அழைப்பாளர்களாக கிறிஸ்தவப் பேராயர்களை அழைத்தார்.

 

அவர் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் இல்லை. 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள்தான். அவர்கள் அனைவருமே இன்றும் மாரியம்மனையும் இசக்கியம்மனையும் குலதெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகைகளைத் தான் கொண்டாடி வருகின்றனர். டாக்டர் அம்பேத்கர் ஹிந்து மதத்தில் இருந்த தீண்டாமையைக் கண்டித்து புத்த மதத்திற்கு மாறினாரே தவிர முஸ்லிம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறவில்லை. இதை வெறும் வழிபாடு மாற்றமே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசியல் சாஸனப் பிரிவு 25ல் புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டதுதான் ஹிந்து மதம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

திருமா துதிபாடும் கிறிஸ்தவ மதத்தில் தீண்டாமை இல்லையா என்ன? மதம் மாறிய சாதாரண குப்பனும் சுப்பனும் பேராயர்களாக வரமுடியுமா? வன்னிய கிறிஸ்தவரோ நாடார் கிறிஸ்தவரோ ஹரிஜன கிறிஸ்தவ குடும்பங்களில் திருமண சம்பந்தத்திற்கு தயாராக இருக்கிறார்களா என்பதை திருமா தெளிவுபடுத்த வேண்டும். சில ஊர்களில் கிறிஸ்தவர்களின் கல்லறையிலேயே கூட தலித்துகளுக்கு தனியிடமாமே? பாரதத்தில் பாதிரிகள் ‘தலித்’ கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடோ, வேலையோ அட்மிஷனோ அளிக்காமல் புறக்கணிப்பதை ‘ஏழை கிறிஸ்தவர்கள் விடுதலை இயக்க’ தலைவர் ஆர்.எல். பிரான்ஸிஸ் அண்மையில் பகிரங்கப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஹரிஜன கிறிஸ்தவர், நாடார் கிறிஸ்தவர், வன்னியர் கிறிஸ்தவர் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமானது? ஹரிஜன், நாடார், வன்னியர் என்பதெல்லாம் ஹிந்து மதத்தில் உள்ள ஜாதி பிரிவுகள் தானே? ஹரிஜன சகோதரர்களை வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, உடல்நலன் போன்ற விஷயங்களில் திருமா கவனம் செலுத்தினால் நல்லது. உங்களுக்கு இருக்கிற அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்கள், மருத்துவ நிலையங்கள், திருமண மண்டபங்கள் என ஹரிஜனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஏராளமான விதங்களில் தொண்டு செய்யலாமே? அதை விட்டுவிட்டு அப்பாவி ஹிந்து ஹரிஜனங்களை கிறிஸ்தவ படுகுழியில் தள்ள நினைக்கலாமா?