பாஜக, மஜத தலைவர்களின் போராட்டத்தால் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் இந்து அமைப்பினர் உரிய அனுமதி இல்லாமல் 108 அடி உயர கம்பத்தை நட்டு, ஹனுமன் கொடியை ஏற்றினர். இதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட நிர்வாகம் கடந்த 28-ம் தேதி ஹனுமன் கொடியை அகற்றியது. மேலும் அதே கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றினர்.
இதனை கண்டித்து பாஜக, மஜத, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கெரகோடு கிராமத்தில் புதன்கிழமை மாலை 6 மணி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா,மங்களூரு, ஷிமோகா ஆகியஇடங்களில் ஆளும் காங்கிரஸை கண்டித்து பாஜக, மஜதவினர் போராட்டம் ந‌டத்தினர். மண்டியாவில் மஜத மாநிலத் தலைவரும் முன்னாள் முதல்வருமான‌எச்.டி.குமாரசாமி தலைமையில் இரு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமாரசாமி பேசுகையில், ‘‘முதல்வர் சித்தராமையா இந்துக்களை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கெரகோடு கிராமத்தினர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஹனுமன் கொடியை ஏற்றியுள்ளனர். அதனை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக சித்தராமையா அதனை அகற்ற உத்தரவிட்டுள்ளார்”என்றார்.
முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி பேசுகையில், ”சித்தராமையாவின் ஆட்சியில் ஹனுமன் கொடிக்கு இடம் இல்லை. தலிபான் கொடிக்குஇடம் இருக்கிறது. இதனை ஒருபோதும் கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”என்றார்.
இதற்கு முதல்வர் சித்தராமையா, ‘‘மதச்சார்பற்ற ஜனதா தளம் என கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு குமாரசாமி காவி துண்டு அணிந்துகொண்டு போராட்டம் நடத்தியுள்ளார். அவருக்கு கொள்கை கோட்பாடு எதுவும் இல்லை. காந்தியை கொன்றவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். இரு கட்சியினரும் இணைந்து காங்கிரஸுக்கு எதிராக சதி செய்கின்றனர். அதனை மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். காங்கிரஸ், ஹனுமனுக்கு எதிரான கட்சி அல்ல. நாங்களே ஹனுமன் பக்தர்கள்தான்”என பதிலளித்தார்.