பாகிஸ்தான் புளுகுமூட்டைகளுக்கு மத்திய அரசு பதிலடி

பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் மையமாக செயல்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில், அடிப்படை ஆதாரமற்ற, பொய் தகவல்களை பரப்புவதற்காக. ஐ.நா., அமைப்பை, பாகிஸ்தான், தவறாக பயன்படுத்துகிறது’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அண்டை நாடான, பாகிஸ்தானின் பிரதிநிதி, மலீஹா லோதி பேசுகையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா மீது, குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ‘ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளதன் மூலம், ஐ.நா., தீர்மானம் மீறப்பட்டுள்ளது. ‘காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன; அங்கு, தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது; ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்’ என்றார்.

பொய்த் தகவல்

இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான, ஐ.நா., பிரதிநிதி, சந்தீப் குமார் பையாபு,  சர்வதேச அமைப்பான, ஐ.நா.,வை, பாகிஸ்தான், தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், அடிப்படை ஆதாரமற்ற, பொய் தகவல்களை, பாக்., பரப்பி வருகிறது. பாகிஸ்தானின் இதுபோன்ற விஷம பிரசாரங்களுக்கு, கடந்த காலங்களில், எந்த பயனும் கிடைத்ததில்லை.

இப்போதும் கிடைக்கப் போவது இல்லை. பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. காஷ்மீரின் உண்மை நிலவரம் தெரியாமல், சிலர் செயல்படுகின்றனர். உலகில், அதிக மக்கள் தொகை உடைய நாடான இந்தியாவுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இன்னும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கொடுக்காமல், பாதுகாப்பு கவுன்சிலில், பெரும்பான்மை மக்களின் கருத்துக்கள் பிரதிபலிக்காது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்து, இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும். ஐ.நா., சார்பில் தாக்கல் செய்யப்படும் ஆண்டறிக்கை, ஒரு சடங்காக இருக்கக் கூடாது. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட அமைதி நடவடிக்கைகள், பாதுகாப்பு போன்ற விஷயங்களையும், கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

”காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, தற்காலிகமாக ஒரு போர் நடக்க வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது. அதற்கான சூழ்நிலை ஏற்பட்டால், எதுவும் நடக்கலாம்”

-ஷா முகமது குரேஷி, பாக்., வெளியுறவு அமைச்சர்