பாகிஸ்தானை மடக்கிய பாரத அரசின் கில்ஜித் வியூகம்

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குத் தொடர்ந்து பாகிஸ்தான் உதவினால், பாக் ஆக்ரமித்த காஷ்மீரை மீட்கவும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளை ஆதரிக்கவும் இந்தியா  இனி தயங்காது என்பதை தான் பிரதமர் மோடி தனது சுதந்திர உரையின் மூலமாக  மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் பற்றி பேச பிரதமர் மோடிக்கு முழு உரிமை உண்டு. ஆனால், பலுசிஸ்தான் பற்றியும் கில்ஜித் பற்றியும் பேச முடியாது என முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வழக்கம் போல், இந்தியாவை தாக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.

பலுசிஸ்தான்

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு இருந்தே, பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுடன் சேர்வதை எதிர்த்து வந்தவர்கள்.  அரசியல் ரீதியாக பாகிஸ்தானில் உள்ள நான்கு பெரிய மாகாணங்களான பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணங்களில் வாழும் மக்கள் பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதில்லை. அவை தனி சுய அதிகாரம் கொண்ட பகுதிகளாக இருந்து வருகின்றன.  இந்நிலையில் தான் 1948லிருந்து இந்த பகுதிகள் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தி வருகின்றன. 1948லிருந்து ஐந்து முறை மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

1948ம்  மார்ச் 27 அன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் பலுசிஸ்தான் ஆட்சியாளரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, நிர்பந்தத்தின் பேரில் பாகிஸ்தானுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.  ஆனால் பலுசிஸ்தான் நாடாளுமன்றம், மத ரீதியான காரணங்களுக்காக பாகிஸ்தானுடன்  இணைந்த ஒப்பந்தத்தை நிராகரித்தது.   இதை தற்போது நினைவுபடுத்தினால் காங்கிரஸ் கட்சியினருக்கு கோபம் வருகிறது.

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் தாக்கப்பட்ட போது, ஹிந்துக்களுக்கு முழு பாதுகாப்பு அரணாக இருந்த பகுதி பலுசிஸ்தான். 1992-ல் அயோத்தியில் பிரச்சினைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டபோது, பாகிஸ்தானில்  உள்ள பஞ்சாப், சிந்து பகுதிகளில் ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன.   பலுசிஸ்தான் தலைவர்கள் காயிர்பக்ஸ் மாரி, அப்துல்லா கான் மெங்கல், நவாப் அக்பர்கான் புக்தி போன்றவர்கள் ஹிந்து ஆலயங்களுக்கு பாதுகாவலர்களாக விளங்கினார்கள்.  ஒரு ஹிந்துக் கோயில் கூட தாக்கப்பட வில்லை.

பலுசிஸ்தானில் 1948, 1958, 1962 ஆகிய வருடங்களில் விடுதலை பெற கிளர்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் பலுசிஸ்தான் முழுவதும் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.  1973 முதல் 1977 வரை நான்கு ஆண்டுகள் நடந்த கிளர்ச்சி மிகப் பெரிய அளவில் நடந்தது.  இந்த கிளர்ச்சியின் போது, பாகிஸ்தானின் ராணுவ தாக்குதல் காரணமாக, ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், தனி நாடு கோரும் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டார்கள்.  இந்த கலவரத்தில் பஞ்சாப் இன மக்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் தங்கள் பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.  இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் பலுசிஸ்தானில் உள்ள கிளர்ச்சியாளர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்வதும், அவர்களை சிறையில் கொடுமைப்படுத்தி பின்னர் கொல்லுவதும் வாடிக்கையாகவே மாறிவிட்டது என ஐ.நா.சபையில் மனித உரிமை ஆணைய அறிக்கை தெரிவித்துள்ளது. 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் எடுத்த ராணுவ நடவடிக்கையில், இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் நவாப் அக்பர்கான் புக்தியை கொன்றபோது, அவருக்கு ஆதரவாக இருந்த பலுசிஸ்தான் ஹிந்துக்களும் கொல்லப்பட்டார்கள்.

பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம் சீனாவின் ஆதரவில் கட்டப்பட்டு வருவது, இந்தியாவிற்கும் ஹிந்துக்களுக்கும் பாதகமானது.  இதன் காரணமாக பலுசிஸ்தானில்  வாழ்ந்து வரும் ஹிந்துக்கள் மீது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, இந்தியாவின் ரா உளவாளிகள் என முத்திரை குத்துக்கிறது.  இவ்வளவு நெருக்கடியின் போதும், ஹிந்துக்கள் வெளியேறாமல் இருப்பதால், பலுசிஸ்தானின் தலைவர்கள் ஹிந்துக்களை காக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் பலுஸ்தானில் நடத்திய ஆய்வில்,  ‘ஜிகாதி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளவர்களின் பட்டியலில் பலுசிஸ்தானியர் இடம் பெற்றுள்ளனர் என்று யாரேனும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல் கொய்தாவிற்காகவோ அல்லது தாலிபானுக்காவோ பலுசிஸ்தானியர்கள் பரிவு காட்டியதாகக் கேள்விப்படிருக்கிறீர்களா? பலுசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எங்காவது நடைபெற்ற பயங்கரவாதச் செயலில் தொடர்புடையவர்கள் என்ற செய்தி கூட வெளிவரவில்லை.  பயங்கரவாத அமைப்பில் தற்கொலை படை பிரிவில் கூட பலுசிஸ்தானியர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1971-ல் பங்களாதேஷ் விடுதலை பெற்றது போல் தாங்களும் வெற்றி பெறலாம் என சுதந்திர போராட்டத்தை நடத்திய போது, பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி  புட்டோ விமானப் படையைப் பயன்படுத்தி பலுசிஸ்தானியர்களின் சுதந்திர போராட்டத்தை கடுமையாக நசுக்கினார்.  இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பலூசிஸ்தான் பற்றி குறிப்பிட்டது, விடுதலைப் போரில் ஈடுபட்டுள்ள பலூசிஸ்தானியர்களுக்கு ஊக்கம் கொடுத்தது போல் ஆகிவிட்டது. இது ஒரு ராஜ தந்திரம் என்றால் மிகையாகாது.

கில்ஜித்  – பால்டிஸ்தான்

இந்த பகுதி இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதி.  இந்த பகுதி இந்தியாவுடன் நெருக்கமான பகுதி என்பதையும் கவனிக்க வேண்டும்.  1948-ல் சட்டவிரோமாக பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட  பகுதி.  பால்டிஸ்தான்  மக்கள்  தங்களது இனத்தின் காரணமாகவும் மதம், கலாசாரத்தினாலும் ஜம்மு – காஷ்மீரில் உள்ள லாடாக் இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.  குறிப்பாக கில்ஜித் பகுதியில் உள்ள மக்கள் ஷியா மத  உறவுவின் காரணமாக லடாக் பகுதியில் உள்ள கார்கில் பகுதியில் வாழும் மக்களுடன் மத ரீதியாக உறவினர்கள்.   இறுதியாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அமைந்துள்ள இடம் இந்த பகுதி.  பாகிஸ்தானில் ஜியா உல் ஹக் ஆட்சியிலிருந்தே கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதராவான வகாபிஸத்தை வளர்க்கத் துவங்கினார்.  ஆனாலும் இந்த பகுதி இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு முக்கியமான இடம். லடாக்கிலிருந்து காஷ்மீருக்குள் செல்லும் பாதையை மலையின் முகட்டிலிருந்து தடுக்கப்படக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

பாகிஸ்தானின் நிலைப்பாடு

காஷ்மீர் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாக அண்டை நாடுகளில் கூச்சல் போடும் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள், தங்களது சட்ட விரோத ஆக்கிரமிப்பால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மனித உரிமை மீறப்படுகிறது என்பதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் மோடி.  பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அத்துமீறல்கள் எண்ணிக்கையில் அடங்காது.  தோட்டாக்களால் துளைத்த 231 பலுச் தேசியவாதிகளின் சடலங்கள் 2011-ல் பலுசிஸ்தான் சாலையில் கிடந்தன.  2012-ல் உலகில் நடந்த குறிப்பாக ஆசியாவில் நடந்த அதிக அளவு வன்முறைகள் நிகழ்ந்த பகுதி என்றால் அது பலுசிஸ்தான்.   25 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்தியப் பிரிவினையை பலுசிஸ்தானியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாகிஸ்தான் உருவானதை அவர்கள் வரவேற்கவேயில்லை.  பாக் போல பலுசிஸ்தானையும் தனி நாடாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை 1947லிருந்த வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.  பலுசிஸ்தானியர்களின் சுதந்திர போராட்டத்தை அரசியல் காரணங்களுக்காக  காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை.  மன்மோகன் சிங் அரசு அக்கறை காட்டத் தொடங்கியபோது, சிலரின் நிர்பந்தத்தால், மன்மோகன் சிங் அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து பல்டி அடித்துவிட்டது.  மேலும்  எகிப்தில் உள்ள ஷரம் எல்ஷேக் நகரில் நடந்த அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது, பாகிஸ்தான் பிரமர் யூசூப் ரஜாகிலானியும் மன்மோகன் சிங் கூட்டாக வெளியிட்ட அறிக்கை, பலுசிஸ்தானில் நடக்கும் சுதந்திர போராட்டத்தை பயங்கரவாத இயக்கம் என வர்ணித்து, பலுசிஸ்தான் மக்களின் நம்பிக்கையை தகர்த்தது.

பாகிஸ்தானை எதிர்த்துப் போராடும் பலுசிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக பாரத பிரதமர் மோடி குரல் கொடுத்ததை ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீர் கர்ஜாய் வங்கதேச தகவல் துறை அமைச்சர் ஹஸநுல் ஹக் உள்ளிட்டோர் வரவேற்றிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி சுதந்திர தின உரை இந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமில்லாமல், பாகிஸ்தானை தனது நிலைப்பாட்டிலிருந்து கீழிறக்கவும் செய்யும்  என்பது திண்ணம்.