பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கல்வெட்டுகளில் வானியல் சாஸ்திர குறிப்புகள் உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கல்வெட்டுகளில் வானியல் சாஸ்திரம் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளதாக இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் அரவிந்த் ஜாம்கேட்கர் தெரிவித்தார்.

சி.பி.ராமசாமி ஐயர் இந்தியவியல் ஆய்வு மையம் சார்பில் ‘தமிழ் கல்வெட்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கம், ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் அரவிந்த் ஜாம்கேட்கர் பங்கேற்று, கருத்தரங்க மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

இந்தியாவில் பல இடங்களில் வெவ்வேறு கட்டிடக் கலைகளின் அடிப்படையில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் கூறும் செய்தியின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள், இப்பகுதிக்கு வந்து கோயில்களைக் கட்டியுள்ளனர் என அறியமுடிகிறது. மேலும், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு கட்டிட தொழில்நுட்பங்கள் பண்டைய காலத்தில் பகிரப்பட்டிருப்பதும் கல்வெட்டுகள் மூலமாக தெரிய வருகிறது.

எல்லோராவில் உள்ள கைலாசநாதர் குடவரை கோயிலில் நூற்றுக்கணக்கான சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த சிலைகளைச் செதுக்கியவர்கள் யாரும் தங்கள் பெயரை கல்வெட்டுகளில் பதிவு செய்யவில்லை. சில குறியீடுகளை மட்டும் பதிவுசெய்துள்ளனர். அதன் அடிப்படையில்தான், அமர்நாத் கோயிலை குஜராத்திலிருந்து சென்ற கலைஞர்கள் கட்டியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் கல்வெட்டுகளில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானியல் சாஸ்திரங்கள் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது சூரிய கிரகணம் நிகழ்வது போன்றவற்றை பஞ்சாங்கங்கள் மூலமாக அறிகிறோம். அந்த காலத்தில் சூரிய கிரகணம் போன்ற வானியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கான அம்சங்கள் தமிழ் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

 

tamil-epigraphy

 

தமிழக தொல்லியல் துறை ஆணையர் டி.உதயசந்திரன் பேசியதாவது:

கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வறிக்கையை சமர்பிப்பதற்கு முன்பாக, அது சார்ந்த தற்கால வல்லுநர்களின் அனுபவத்தைப் பெற்று, அந்தஅறிவைக் கொண்டு ஆய்வறிக்கைகளை உருவாக்க வேண்டும்.

கீழடியில் பழங்கால பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தைப் பார்க்க ஒரே மாதத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்துசென்றுள்ளனர். கீழடி தொடர்பாக,சென்னை புத்தகக் காட்சியில் வைக்கப்பட்ட அரங்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கீழடி அகழாய்வில் இந்தியாவிலேயே முதல்முறையாக நவீனதொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், இமேஜ் பிராசஸிங் போன்ற மென்பொருட்களை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு டி.உதயசந்திரன் கூறினார்.

இக்கருத்தரங்கில் சி.பி.ராமசாமி ஐயர் இந்தியவியல் ஆய்வுமைய இயக்குநர் நந்திதா கிருஷ்ணா, சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை முன்னாள் தலைவர் ப.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.